< Back
மாநில செய்திகள்
பெரியமேடு, வேப்பேரி பகுதியில் 3 பேருக்கு பட்டா கத்தி வெட்டு
சென்னை
மாநில செய்திகள்

பெரியமேடு, வேப்பேரி பகுதியில் 3 பேருக்கு பட்டா கத்தி வெட்டு

தினத்தந்தி
|
31 May 2022 3:22 PM IST

சென்னை பெரியமேடு, வேப்பேரி பகுதியில் சாலையில் நடந்து சென்ற 3 பேரை பட்டாகத்தியால் வெட்டியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை வேப்பேரி குறவன்குளம் பகுதியைச்சேர்ந்தவர் செல்வராஜ். கூலி தொழிலாளி. அதே பகுதியைச்சேர்ந்த இன்னொருவர் கான். அவரும் கூலி வேலை செய்பவர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் கூச்சல் போட்டுக்கொண்டே வந்தனர். அவர்கள் கைகளில் பளபளக்கும் பட்டாகத்திகள் இருந்தது. அவற்றை சுழற்றியபடி வந்தனர். சாலையில் சென்று கொண்டிருந்த செல்வராஜ் மற்றும் கான் ஆகியோரை மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் பட்டாகத்தியால் வெட்டினார்கள். சாலையில் நடந்து சென்ற இன்னொரு நபரும் வெட்டப்பட்டார்.

அவர்களின் அட்டூழியத்தை பார்த்து சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினார்கள். பின்னர் அந்த நபர்கள் தொடர்ந்து கூச்சல் போட்டுக்கொண்டே பெரியமேடு வழியாக மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

இந்த அட்டூழியத்தில் ஈடுபட்ட 3 பேரும் பிரபல ரவுடிகள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் பெயர் பரத், விஜயகுமார், ரகுபதி என்பதாகும். பரத் பெரிய மேட்டைச் சேர்ந்தவர். இவர் மீது 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது. விஜயகுமார் வியாசர்பாடியைச் சேர்ந்தவர். இவர் மீதும் 12 வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. ரகுபதி புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர். இவரும் 10 வழக்குகளில் சிக்கி இருப்பவர். இவர்கள் மூவரையும் கைது செய்ய அதிரடி நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.இவர்களால் பட்டாகத்தியால் வெட்டப்பட்ட 3 பேரும் பலத்த காயத்துடன், ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வேப்பேரி போலீசார் மேற்கண்ட ரவுடிகள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தற்போது வேப்பேரி போலீசில் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் காலியாக உள்ளது. பெரியமேடு போலீஸ் நிலையத்திலும், நீண்ட நாட்களாக குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பதவி காலியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காலி பணி இடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்