தேனி
பெரியகுளம், போடி பகுதிகளில் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
|பெரியகுளம், போடி பகுதிகளில் உள்ள கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது
பெரியகுளம் அருகே ஈச்சமலை பகுதியில் உள்ள மகாலட்சுமி கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சிவனுக்கு ருத்ராட்ச மாலை மற்றும் பச்சை துண்டு அணிவிக்கப்பட்டது. மேலும் நந்தீகேஸ்வரர், மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. சுவாமி மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பிரதோஷ வழிபாட்டில் தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோவில், பெரியகுளம் பாலசுப்ரமணிய சுவாமி கோவில், காளஹஸ்தீஸ்வரர் கோவில், தென்கரை காளியம்மன் கோவில் உள்பட சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதேபோல் போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ கொண்டரங்கி மல்லையப்ப சுவாமி கோவிலில் பிரதோஷத்தையொட்டி நேற்று சிவ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சிவ பெருமானுக்கு கங்காதரன் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் பிச்சாங்கரை கீழ சொக்கநாதர் கோவில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.