< Back
மாநில செய்திகள்
பேராவூரணி தி.மு.க. எம்.எல்.ஏ. நடத்திய மொய் விருந்தில் ரூ.11 கோடி வசூல்
மாநில செய்திகள்

பேராவூரணி தி.மு.க. எம்.எல்.ஏ. நடத்திய மொய் விருந்தில் ரூ.11 கோடி வசூல்

தினத்தந்தி
|
25 Aug 2022 3:03 AM IST

பேராவூரணி தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக்குமார் நடத்திய மொய் விருந்தில் ரூ.11 கோடி வசூலானது. தனி நபர் நடத்திய மொய் விருந்தில் இதுவே அதிகபட்ச வசூலாகும்.

மொய் விருந்து

தஞ்சை மாவட்டம் பேராவூரணி மற்றும் அதனைச்சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் அண்டை மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்திலும் கடந்த பல ஆண்டுகளாக மொய் விருந்து விழா நடத்தப்பட்டு வருகிறது. மொய் விருந்து நடத்தியவர்கள், வசூலான பணத்தின் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வர்.

இந்த நிலையில் பேராவூரணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக்குமார் 5 வருடங்களுக்கு முன்பு மொய் விருந்து நடத்தினார். இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் அவர் மொய் விருந்து நடத்தினார். பேராவூரணி-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காதணி விழா மொய் விருந்து என்ற பெயரில் மொய் விருந்துக்கான ஏற்பாட்டை விமரிசையாக செய்திருந்தார்.

கமகமக்கும் மொய்விருந்து

விழாவில் 100 ஆட்டுக்கிடாய்கள் வெட்டப்பட்டு 1300 கிலோ கறியுடன் பெரிய அண்டாவில் மட்டன் குழம்பு, குடல் கூட்டு மற்றும் சோறு சமைக்கப்பட்டு இருந்தது.

200-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சமையல் பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவில் கலந்து கொண்டோருக்கு இலை நிறைய சோறு, கரண்டி நிறைய கறி விருந்து வைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த மொய் விருந்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 15 ஆயிரம் பேருக்கு உணவு பரிமாறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

40 கவுண்ட்டர்கள்

மொய் விருந்து சாப்பிட்டவர்கள் மொய் எழுதினார்கள். இதற்காக பணம் என்னும் மெஷினுடன் 40 கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட இடத்தில் மொய் செலுத்துவதற்கு வசதியாக அந்தந்த ஊரின் பெயர்கள் அடங்கிய பதாகை மொய் எழுதும் இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. மொய் எழுதும் இடத்தில் துப்பாக்கி ஏந்திய தனியார் செக்யூரிட்டிகள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். பத்துக்கு மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அந்த பகுதி முழுவதும் கண்காணிக்கப்பட்டது.

ரூ.11 கோடி வசூல்

விருந்தில் பங்கேற்றவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ஆயிரம் ரூபாய் தொடங்கி ரூ.5 லட்சம் வரை தங்கள் வசதிக்கேற்ப மொய் எழுதி சென்றனர். மாலையில் வங்கி அதிகாரிகள் விழா நடந்த இடத்திற்கு வந்து மொய் விருந்தில் வசூலான பணத்தை எண்ண தொடங்கினர். இதில் ரூ.11 கோடி மொய் வசூல் ஆகி இருந்தது.

தனி நபர் நடத்திய மொய் விருந்தில் வசூலான தொகையில் இதுவே அதிகபட்சம் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்