< Back
மாநில செய்திகள்
பெரம்பூர் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு 60 கிலோ மீட்டர் சுற்றிச்செல்லும் பக்தர்கள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

பெரம்பூர் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு 60 கிலோ மீட்டர் சுற்றிச்செல்லும் பக்தர்கள்

தினத்தந்தி
|
1 Sept 2023 12:02 AM IST

பெரம்பூரில் குண்டும், குழியுமான சாலையால் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதியடைந்தனர். மேலும் 60 கிலோ மீட்டர் சுற்றிச் செல்வதாக வேதனை அடைந்து வருகின்றனர்.

வீரமாகாளியம்மன் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா பெரம்பூர் கிராமத்தில் வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. வாரந்தோறும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், மாதந்தோறும் வரும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வாகனங்கள் மூலமாக ஆதனக்கோட்டை வழியாக பெரம்பூர் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோரிக்கை

ஆதனக்கோட்டையிலிருந்து கருப்புடையான்பட்டி வழியாக பெரம்பூர் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் 7 கிலோ மீட்டர் தார்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் பக்தர்கள் சிலர் கீழே விழுந்து காயமடைந்து வரும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்த சாலையில் பக்தர்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

அடிக்கடி விபத்துகள்

பந்துவக்கோட்டையை சேர்ந்த சத்யப்பிரியா:- நான் எனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மாதம் இருமுறை வீரமாகாளியம்மன் கோவிலுக்கு சென்று வருவோம். கருப்புடையான்பட்டி வழியாக பெரம்பூர் கோவிலுக்கு செல்லும்போது தார்சாலை பல்வேறு இடங்களில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாகவும், சில இடங்களில் குறுகலாகவும் இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைவதும், எதிரே வரும் வாகனத்திற்கு இடம் கொடுக்கும் போது, வாகனத்துடன் வாகனம் மோதி அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றது. இதனால் கோவிலுக்கு செல்லவேண்டிய பக்தர்கள் காயமடைந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. மோட்டார் சைக்கிள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது பஞ்சராகி விடுவதும், 7 கிலோ மீட்டர் சாலையை கடக்க ஒரு மணி நேரம் ஆகிறது. எனவே குண்டும், குழியுமான தார்சாலையை சீரமைக்க வேண்டும்.

60 கிலோ மீட்டர் சுற்றி...

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தளவாபாளையத்தை சேர்ந்த வீரையன்:- மாதம் ேதாறும் செவ்வாய்க்கிழமைகளில் கந்தர்வக்கோட்டையில் இருந்து பெரம்பூர் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் சிறப்பு பஸ் மூலம் குடும்பத்துடன் சென்று வருவோம். கந்தர்வகோட்டை மார்க்கத்தில் இருந்து ஆதனக்கோட்டை வழியாக கருப்புடையான்பட்டி பெரம்பூர் இடையே உள்ள குண்டும், குழியுமான சாலையால் பஸ் பஞ்சராகி பயணிகளை நடுவழியில் இறக்கி விடுகின்றனர். இதனால் இந்த மார்க்கத்தில் செல்லும் பஸ்களை பக்தர்கள் தவிர்த்து புதுக்கோட்டை சென்று அண்டக்குளம் வழியாகவும், மற்றொரு மார்க்கமாக செங்கிப்பட்டி சென்று கிள்ளனூர் வழியாகவும் பெரம்பூருக்கு 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி வருகின்றோம். இதனால் பக்தர்களுக்கு அதிக செலவும், கால விரயமும் ஏற்படுகிறது. இதனால் கருப்புடையான்பட்டியிலிருந்து பெரம்பூர் செல்லும் குண்டும், குழியுமான தார்சாலையை சீரமைத்து உடனடியாக புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும்.

சீரமைக்க வேண்டும்

கருப்புடையான்பட்டியை சேர்ந்த சுப்ரமணியன்:- குண்டும், குழியுமான தார்சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்போதைய கலெக்டரிடம் பொதுமக்களுடன் கோரிக்கை வைத்தோம். உடனடியாக சாலை சீரமைக்கப்படும் என கூறி சென்று 1½ ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது அவரே மாவட்டத்தை விட்டு மாறி சென்றுவிட்டார். இன்னும் இந்த தார்சாலை சீரமைக்கப்படவில்லை. எனவே குறுகலான சாலையாக உள்ளதை அகலப்படுத்தி தார்சாலையாக உடனடியாக சீரமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்