பெரம்பலூர்: செல்போன் கடை ஊழியர் ஓடஓட விரட்டி கொலை - மர்ம கும்பல் வெறிச்செயல்
|பெரம்பலூரில் செல்போன் கடை ஊழியரை ஓட ஓட விரட்டி மர்மகும்பல் கொலை செய்தனர். இதில் வெட்டுகாயமடைந்த நண்பர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் நகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் வினோத் (வயது 28). இவர் பெரம்பலூரில் ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இவரும், அவரது நண்பரான கார்த்திக்கும்(23) இன்று மாலை நிர்மலா நகரில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள மாரியம்மன் கோவில் திண்ணையில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஒரு மர்ம கும்பல் வினோத்தையும், கார்த்திக்கை வெட்டியது. இதில் வினோத்தும், கார்த்திக்கும் வெட்டுக்காயங்களுடன் தங்களது உயிரை காப்பாற்றி கொள்வதற்காக வெவ்வேறு திசையில் ஓடினர்.
ஆனால் மர்மகும்பல் பிரிந்து சென்று அவர்களை விடாமல் பின்தொடர்ந்து விரட்டினர். இதில் கார்த்திக் அந்தப்பகுதியில் உள்ள தெருக்களில் ஓடி தப்பித்து விட்டார். ஆனால் வினோத் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளிக்கு செல்லும் சாலையில் ஓடியதில் மர்மகும்பலிடம் சிக்கினார்.
அப்போது மர்மகும்பல் வினோத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்து மர்மநபர்கள் மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே நடந்த இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து அந்தப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் கூடினர். அவர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த கார்த்திக்கை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர்கள் வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.