< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் தேரோட்டம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
5 April 2023 5:45 PM GMT

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்தனர்.

தேரோட்டம்

பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. முக்கிய திருவிழாவான திருக்கல்யாண உற்சவம் கடந்த 3-ந் தேதி நடந்தது. நேற்று முன்தினம் வெண்ணெய்த்தாழி உற்சவம் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு ரதா ரோஹனம் நடந்தது. தேரில் மதனகோபாலசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தேர் சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் பட்டாபிராமன் மற்றும் சென்னை திருமழிசை ஆழ்வார் திருக்கோவில் பட்டாச்சாரியார் திரிவிக்ரமன் குழுவினர் நடத்திவைத்தனர்.

அதனைத்தொடர்ந்து திருத்தேர் வடம்பிடித்தலும், தேரோட்டமும் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையர்கண்ணி, பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு தலைவர் கலியபெருமாள், கோவில் செயல் அலுவலர் ராஜதிலகம் ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனர்.

காலை மட்டையடி, இரவு ஊஞ்சல் உற்சவம்

தேரோட்டத்தில் ஆண்களைவிட பெண் பக்தர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர். கோவிந்தா.. கோபாலா.. என்ற கோஷங்களை முழங்கினர். தேர் தெற்குத்தெரு, கடைவீதி, சஞ்சீவிராயன்கோவில் தெருவழியாக இழுத்துவரப்பட்டு மாலை 6 மணி அளவில் அதன் நிலையை அடைந்தது. தேர் நிலைக்கு நின்றவுடன் பிராய்சித்த வழிபாடு நடந்தது. இன்று (வியாழக்கிழமை) காலை துவாதச ஆராதனமும், இரவு ஸப்தா வரணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

நாளை (வெள்ளிக்கிழமை) காலை ஸ்நபன திருமஞ்சனம், இரவு புன்னை மர வாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது. 8-ந் தேதி காலை மட்டையடி, இரவு ஊஞ்சல் உற்சவமும், 9-ந் தேதி காலை மஞ்சள் நீர், இரவு விடையாற்றி விழாவும் நடக்கிறது. 10-ந் தேதி திருத்தேர் 8-ம் திருவிழா காலை 10 மணிக்கு பெருமாள் திருமஞ்சனம், இரவு பெருமாள் ஏகாந்தசேவையுடன் சுவாமி புறப்பாடும் நடக்கிறது. பங்குனி உத்திர பெருந்திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் சீர்பாத பணியாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள், கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்