< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெரம்பலூரில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

தினத்தந்தி
|
7 Sept 2023 12:34 AM IST

பெரம்பலூரில் கிருஷ்ண ஜெயந்தி நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறுவர், சிறுமிகள் கண்ணன், ராதை வேடமிட்டு ஆடி, பாடி மகிழ்ந்தனர்.

கிருஷ்ண ஜெயந்தி

இந்துக்களின் பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்தி முக்கியமானது ஆகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் தேய்பிறை அஷ்டமியும், ரோகிணி நட்சத்திரமும், ரிஷப லக்கனமும் வரும் நாளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் கிருஷ்ணஜெயந்தியையொட்டி யாதவ மகாஜன சங்கம் சார்பில் நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சன உற்சவம் நடந்தது. இதில் நவநீத கிருஷ்ணர் சன்னதியில் உற்சவ கிருஷ்ணருக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களைகொண்டு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

அதனைத்தொடர்ந்து உற்சவர் மற்றும் மூலவருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. திருமஞ்சன உற்சவத்தை கோவில் பட்டாச்சாரியார் பட்டாபிராமன் நடத்தி வைத்தார். இதில் திரளான பக்தர்கள், கலந்து கொண்டனர்.

உறியடி திருவிழா

பெரம்பலூர் எடத்தெருவில் உள்ள ராஜகோபாலசுவாமி கோவிலில் நேற்று மாலை தொட்டிலில் கிருஷ்ணரின் உருவம் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் எடத்தெரு, தெற்குத்தெரு, சஞ்சீவிராயர் கோவில் தெரு, வெள்ளாளர் தெரு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். எடத்தெரு ராஜகோபாலசுவாமி கோவிலில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெண்ணெய்த்தாழி உற்சவம் நடக்கிறது. இதையொட்டி மதனகோபாலசுவாமி கோவிலில் இருந்து உற்சவ நவநீத கிருஷ்ணர் திருமேனி பல்லக்கில் எடுத்துவரப்பட்டு, ராஜகோபாலசுவாமி கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மீண்டும் மதனகோபாலசுவாமி கோவிலுக்கு பல்லக்கில் எடுத்து வரப்படுகிறது. அதனைத்தொடர்ந்து நாளை மாலை 5 மணியளவில் உறியடி திருவிழா 4 இடங்களில் நடக்கிறது.

சிறப்பு உபன்யாசம்

பெரம்பலூரில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) ஹரே கிருஷ்ண பிரசார மையம் சார்பில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி மகாஉற்சவம் மேரிபுரத்தில் உள்ள முத்து கோனார் மகாலில் நேற்று மாலை தொடங்கி இரவு வரை நடந்தது. இதையொட்டி மாலை 5 மணிக்கு ஸ்ரீராதா மதனகோபாலருக்கு மகா அபிஷேகம், ஆரத்தி, ஹரிநாம சங்கீர்த்தனமும் நடந்தது. இதனைத்தொடர்ந்து இஸ்கான் அமைப்பின் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதானந்த சைதன்யதாஸ பிரபு கிருஷ்ண அவதாரம் பற்றிய சிறப்பு உபன்யாசம் நடத்தினார். குழந்தைகளுக்கான கலைநிகழ்ச்சிகள் நடந்தது. சிறுவர்-சிறுமிகள் கிருஷ்ணர், ராதை போல் வேடமிட்டு உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.பெண்கள் கிருஷ்ணரின் மேன்மைகளை கூறும் பாடல்களை பாடினர். அதன்பின்பு மகா ஆராத்தியும், மகாபிரசாத வினியோகம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள், சிறுவர்-சிறுமிகள் உள்பட பலர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சி நிறைவில் மகா அன்னதானம் நடந்தது.

கிருஷ்ண ஜெயந்தி விழாவின் தொடர்ச்சியாக பெரம்பலூரை அடுத்த செஞ்சேரியில் துறையூர் சாலையில் உள்ள ஹரேகிருஷ்ணா பிரசார மைய வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை சிறப்பு பூஜைகள், சத்சங்கம், மகா ஆரத்தி ஆகியவை நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இஸ்கான் தன்னார்வ தொண்டர்கள் செய்துள்ளனர்.

கிருஷ்ணர், ராதை

இதேபோல் பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள நளினாம்பிகை சமேத காகன்னை ஈஸ்வரர் கோவிலில் கிருஷ்ணஜெயந்தியையொட்டி கிருஷ்ணரின் சிலைக்கு வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சீடை, அவல், வெண்ணெய் உள்ளிட்ட பட்சணங்கள் நிவேதனம் செய்யப்பட்டு மகா ஆரத்தி நடந்தது. பூஜைகளை ரோகிணி மாதாஜி முன்னிலையில் தவசி நாதன் சுவாமி நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கிருஷ்ணர்-ராதை வேடமிட்ட சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்