< Back
மாநில செய்திகள்
திருடர்களின் கூடாரமாக மாறிய பெரம்பலூர் மாவட்டம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

திருடர்களின் கூடாரமாக மாறிய பெரம்பலூர் மாவட்டம்

தினத்தந்தி
|
24 Sept 2022 12:02 AM IST

திருடர்களின் கூடாரமாக பெரம்பலூர் மாவட்டம் மாறியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மீண்டும் அதிகரிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் மீண்டும் கடந்த சில நாட்களாகவே தொடர் திருட்டு சம்பவங்கள், சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலையில் கார் கண்ணாடியை உடைத்து உள்ளே உள்ள பொருட்கள் திருடி செல்கின்றனர். வீடு புகுந்து தூங்கி கொண்டிருக்கும் பெண்ணிடம், இரு சக்கர வாகனங்களில் செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவது பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வங்கியில் இருந்து எடுத்து இரு சக்கர வாகனங்களில் பெட்டிகளில் பணம் திருடப்படுகிறது. மாவட்டத்தில் தொடர் திருட்டால் வீட்டை பூட்டி விட்டு நிம்மதியாக வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அந்த அளவுக்கு மாவட்டத்தில் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனால் திருடர்களின் கூடாரமாக பெரம்பலூர் மாவட்டம் மாறியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

போலீசார் திணறல்

இதில் ஒரு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிப்பதற்குள், அடுத்தடுத்து திருட்டு சம்பவம், சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவது போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனால் மர்மநபர்களை போலீசார் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்த திருட்டு, சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே மர்ம கும்பலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தீவிர ரோந்து பணி

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மற்ற மாவட்டங்களில் இது போன்ற தொடர் திருட்டு சம்பவங்களை கேள்விப்பட்டதில்லை. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தை குறிவைத்து திருட்டில் ஈடுபடும் மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை போலீசாரை அமைக்க வேண்டும். மேலும் கூடுதல் போலீசாரை நியமித்து, அவர்களை தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தேகம்படும்படியாக சுற்றித்திரியும் நபர்களையும் பிடித்தும் போலீசார் விசாரிக்க வேண்டும், என்றனர்.

கேமராக்கள் பொருத்த வேண்டும்

மேலும் போலீசார் தரப்பில் கூறுகையில், பொதுமக்கள் தங்களது வீட்டினை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் போது அருகே உள்ள போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும். வெளியூர் செல்லும் போது வீட்டில் நகை, பணத்தை வைக்காமலும், ஏ.டி.எம்.கார்டு மற்றும் முக்கிய பத்திர ஆவணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்து பயன்படுத்தும் வகையிலும் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். தங்கள் வீட்டின் முன்புறமும், பின்புறமும் மற்றும் சாலையை கவனிக்கும் வகையிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். சந்தேகம்படும்படியாக சுற்றித்திரியும் நபர்கள் குறித்து போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் தந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்