பெரம்பலூர்
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை
|பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில், அதன் தலைவரும், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான சீனிவாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது சாதனைகளில் புதிய மைல் கல் ஆகும். கடந்த 14-ந் தேதி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த நபர் ஒருவரிடம் இருந்து அவரது குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலுடன் அனைத்து உறுப்புகளும் தானமாக பெறப்பட்டு பல்வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. அதில் அந்த நபரிடமிருந்து பெறப்பட்ட கல்லீரல் ஆனது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டு, அன்றைய தினமே நன்கு திறமை வாய்ந்த மருத்துவ குழுவினர்களால் நாள்பட்ட கல்லீரல் நோயால் அவதிப்பட்டு தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்து வரிசையில் காத்திருந்த 45 வயதுடைய ஆண் ஒருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர்கள், சென்னை குளோபல் மருத்துவமனையின் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் இணைந்து இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர். அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் அந்த நபர் கடந்த ஒரு வாரமாக டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். தற்போது அவர் பூரண குணம் அடைந்து அவரது வீட்டிற்கு செல்கிறார். மேலும் மருத்துவமனையில் இதுவரை 78 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளும் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் நவீன உபகரணங்களுடன் பொது மருத்துவம் முதல் உயர் சிறப்பு மருத்துவம் வரை உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையானது அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் நமது மருத்துவமனையை பயன்படுத்தி தங்கள் வாழ்வில் நோயற்ற நலமும் வளமும் பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் செயலாளர் நீல்ராஜ், நிர்வாக இயக்குனர் நீவாணி கதிரவன், `டீன்' வெங்கிடுசாமி, கண்காணிப்பாளர் விஜயன் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.