பெரம்பலூர்
பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க நிதி நிறுவனத்திற்கு, பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
|பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க நிதி நிறுவனத்திற்கு, பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மனைவி தமிழ்ச்செல்வி (வயது 31). இவர் தனது நகைகளை அடகுவைத்து பணம் பெற்றுத்தருமாறு தனது மூத்த சகோதரர் செல்வகுமாரிடம் கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் கொடுத்த 153.8 கிராம் நகைகளை செல்வகுமார், பெரம்பலூரில் உள்ள முத்தூட் நிதி நிறுவனத்தில் கடந்த 2017-ம் ஆண்டு அடமானமாக வைத்து, ரூ.3 லட்சத்து 6 ஆயிரத்து 700-ஐ நகைக்கடனாக பெற்றிருந்தார். சிறிதுகாலத்தில் செல்வகுமார் இறந்துவிட்டார். இதற்கிடையே அந்த கடனை தமிழ்ச்செல்வி முறையாக திருப்பி செலுத்தி வந்தார்.
இந்நிலையில் அந்த நிதி நிறுவனத்தினர், நகைக்கடன் பெற்றவரின் வாரிசுதாரர் என்ற அடிப்படையில் செல்வகுமாரின் தங்கை தமிழ்ச்செல்விக்கு முறைப்படி கடிதம் மூலம் தெரிவிக்காமல், செல்வகுமார் அடகு வைத்த அனைத்து நகைகளையும் ஏலத்தில் விட்டுவிட்டு, அவர் செலுத்த வேண்டிய கடன்தொகை மற்றும் வட்டித்தொகைக்கு பற்றுவைத்தனர். கடன்தொகை செலுத்தியதுபோக மீதமுள்ள தொகை குறித்து தமிழ்ச்செல்விக்கு நிதி நிறுவனத்தினர் தகவல் தெரிவிக்காமல் மறைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்ச்செல்வி பலமுறை அந்த நிதி நிறுவனத்திடம் முறையிட்டு, தனது நகைகளை மீட்க உதவுமாறு கேட்டார். மேலும் வக்கீல் மூலம் அந்த நிதி நிறுவனத்திற்கு நோட்டீசும் அனுப்பினார். அதற்கும் அந்த நிறுவனம் சரியாக பதில் அளிக்காமல் தமிழ்ச்செல்வியை அலையவிட்டதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தமிழ்ச்செல்வி தனது வக்கீல் பாண்டியன் மூலம் அந்த நிதி நிறுவனத்தின் பெரம்பலூர் மேலாளர் மற்றும் கொச்சியில் உள்ள இந்நிறுவனத்தின் தலைமை அலுவலக மேலாளர் ஆகியோர் மீது பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர், நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டிற்காக மற்றும் தமிழ்ச்செல்வியின் மன உளைச்சலுக்கு காரணமான எதிர்மனுதாரர்கள் நிவாரணத்தொகையாக ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரமும் தமிழ்ச்செல்விக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் நகைகளை ஏலம் விட்ட தொகையை கடன் கணக்கிற்கு பற்று வைத்ததுபோக மீதமுள்ள தொகையை 8 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.