பெரம்பலூர்
வெளிநாடுகளுக்கு விமானத்தில் பறக்கும் பெரம்பலூர் சின்ன வெங்காயம்
|வெளிநாடுகளுக்கு விமானத்தில் பறக்கும் பெரம்பலூர் சின்ன வெங்காயம் இல்லத்தரசிகளின் சமையலில் முக்கிய உணவு பொருளாக சின்ன வெங்காயம் பங்கு வகிக்கிறது. அத்தகைய சின்ன வெங்காயம் தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் தான் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
3 பட்டங்களாக சாகுபடி
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், ஆலத்தூர் தாலுகாக்களில் சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் சின்ன வெங்காயத்துக்கு தனி மவுசு உண்டு. இங்குள்ள பெரும்பாலான விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் சின்ன வெங்காய சாகுபடியில் ஈடுபடுகின்றனர். குறைந்தது சுமார் 60 முதல் 70 நாள் பயிரான சின்ன வெங்காயத்தை ஒரு ஆண்டில் 3 பட்டங்களாக விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் வியாபாரிகளும் நேரடியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வயலுக்கு வந்து, சின்ன வெங்காயத்தை நேரடியாக கொள்முதல் செய்து செல்கின்றனர். இடைத்தரகர்கள் மூலம் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சரியான விலை இல்லையென்றால் விவசாயிகள் சின்ன வெங்காயத்தை பட்டறை கட்டி பாதுகாப்பாக சேமித்து வைத்து, விலை இருக்கும் போது விற்பனை செய்கின்றனர். இதேபோல் விதை வெங்காயத்துக்காகவும் பட்டறை கட்டி சின்ன வெங்காயத்தை சேமித்து வைத்து மீண்டும் நடவு பணிக்கு பயன்படுத்துகின்றனர். சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்து, விளைச்சலாகி, அதனை விற்பனை செய்யும் வரை பல்வேறு இடையூறுகளை விவசாயிகள் சந்திக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள், வியாபாரிகள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
நேரடி கொள்முதல் நிலையம்
பெரம்பலூர் தாலுகா, பொம்மனப்பாடியை சேர்ந்த அழகுமணி:- சின்ன வெங்காயம் உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் தொடர்ந்து முதலிடம் வகிப்பது விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் பெருமையாக உள்ளது. அந்த அளவுக்கு பெரம்பலூர் மாவட்ட சின்ன வெங்காயத்துக்கு எங்கு போனாலும் தனி மவுசு உள்ளது. சின்ன வெங்காயம் சாகுபடிக்கு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை தோட்டக்கலைத்துறையும், மாவட்ட நிர்வாகமும் செயல்படுத்தி வருகிறது. ஆனாலும் சின்ன வெங்காயம் நல்ல விளைச்சல் இருக்கும் போது போதியளவு விலை இல்லை. விலை இருக்கும் போது போதியளவு விளைச்சல் இல்லை. பெரம்பலூர், ஆலத்தூர் தாலுகாக்களில் சின்ன வெங்காயத்தை மட்டுமே விவசாயிகள் நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். வியாபாரிகளும், இடைத்தரகர்களும் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். அதில் சிலர் சின்ன வெங்காயத்தை பதுக்கி சந்தையில் அதிகம் விலைக்கு விற்கும் சூழ்நிலையும் நிலவுவதால் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. இதையெல்லாம் தடுக்க அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்தால் பதுக்கலை கட்டுப்படுத்தி, விலை ஏற்றத்தையும் தடுக்கலாம்.
அதிகம் சாகுபடி செய்ய காரணம்
ஆலத்தூர் தாலுகா, ஈச்சங்காட்டை சேர்ந்த விஜயன்:- பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய செம்மண் தான் காரணம். ஆலத்தூர் தாலுகா, பெரம்பலூர் தாலுகாவில் சில பகுதிகளில் விவசாய விளை நிலங்களில் செம்மண் காணப்படுகிறது. செம்மண்ணில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் 4 மாதங்கள் அழுகாமல் தாக்குப்பிடிக்கும். தண்ணீர் அதிகம் தேவைப்படும். இதனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காயத்துக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் வரவேற்பு உள்ளது. தண்ணீர் தேவை குறைவு என்றாலும் கரும்மண்ணில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் 3 மாதங்கள் கூட தாக்குப்பிடிக்காது. விலை உயர்வை கட்டுப்படுத்தவும், ஆண்டு முழுவதும் சின்ன வெங்காயம் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்கவும் தமிழக அரசு வேளாண் பட்ஜெட்டில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு அறிவித்த விதைப்பு எந்திரங்கள், சேமிப்பு கட்டமைப்புகள், அறுவடை எந்திரங்கள், வெங்காயத்தாள் பிரித்தெடுக்கும் கருவிகள் ஆகியவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை விவசாயம் மூலம் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய அரசு மாதிரி பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறைந்த பட்ச ஆதார விலை
மருதடியை சேர்ந்த சரவணன்:- நோய் தாக்குதல், விதை வெங்காயம் விலையேற்றம், ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, மருந்து, உரங்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு இடையூறுகளை விவசாயிகள் சந்தித்து சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்தனர். ஆனால் தற்போது பருவநிலை மாற்றத்தால் வெப்பத்தின் காரணமாக சின்ன வெங்காயம் பயிரில் வெள்ளை தாள் நோய் தாக்கி விளைச்சலை குறைத்துள்ளது. ஆனால் தற்போது சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை உள்ளது. கடந்த காலங்களில் நல்ல விளைச்சல் இருந்தும் விலை இல்லை. பருவநிலை மாற்றத்தால் சின்ன வெங்காயம் பாதிக்கப்பட்டால், அதற்கு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விதை வெங்காயம் மானிய விலையில் கிடைக்கவும், உரம், மருந்து தரமானதாகவும் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. காவிரி நீரை மாவட்டத்திற்கு வாய்க்கால்கள் மூலம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய வெங்காயத்திற்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்துள்ளது போல், சின்ன வெங்காயத்துக்கும் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விலையை சீராக இருக்க சின்ன வெங்காயத்தை ரேஷன் கடை மூலம் விற்பனை செய்ய அரசு முன்வர வேண்டும். சின்ன வெங்காயத்தை போதிய அளவு சந்தைப்படுத்த வேண்டும்.
குளிர்பதன கிடங்கு
செட்டிகுளத்தை சேர்ந்த ராம்குமார்:- மாவட்டத்தில் செட்டிகுளத்தில் தான் சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் பட்டறை கட்டி சின்ன வெங்காயத்தை பாதுகாப்பாக சேமித்து வைத்தாலும், அது 3 மாதம் வரைதான் தாக்குப்பிடிக்கிறது. அவ்வாறு சேமித்து வைத்தாலும், விலை உயரும் போது சில இடங்களில் சின்ன வெங்காயத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்செல்லும் அவலம் ஏற்படுகிறது. செட்டிகுளத்தில் உள்ள சின்ன வெங்காய வணிக வளாகத்தை முறையாக திறந்து, அதில் ஏலம் மூலம் விற்பனை நடைபெற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால், விவசாயிகளுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். பயன்பாட்டில் இல்லாத செட்டிகுளம் சின்ன வெங்காய குளிர்பதன கிடங்கினை, சேமிப்பு கிடங்காக அதிகாரிகள் மாற்றினால், அதில் சின்ன வெங்காயத்தை 6 மாதங்கள் வரை சேமித்து வைத்து விற்பனை செய்யலாம்.
100 நாள் வேலை தொழிலாளர்கள்
அடைக்கம்பட்டியை சேர்ந்த கதிர்வேல்:- ஏற்கனவே விதை வெங்காயம் விலையேற்றம், ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, மருந்து, உரங்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு இடையூறுகளை விவசாயிகள் சந்தித்து சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்து வருகிறோம். இதனால் ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. தற்போது 100 நாள் திட்ட வேலையால் சின்ன வெங்காயம் நடவுவதற்கும், களை எடுப்பதற்கும், அறுவடை செய்வதற்கும், பிரித்தெடுப்பதற்கும் கூலி உயர்ந்தாலும் போதிய ஆட்கள் கிடைப்பதில்லை. இதற்கு 100 நாள் வேலை திட்டம் தான் காரணம். அந்த தொழிலாளர்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது விவசாய பணிகள் இல்லாத போது அவர்களுக்கு 100 நாள் வேலையை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எகிப்து நாட்டு சின்ன வெங்காயம்
நாட்டார்மங்கலத்தை சேர்ந்த செல்வராஜ்:- பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் எங்களை போன்ற வியாபாரிகள் கொள்முதல் செய்து திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். இடைத்தரகர்கள் மூலம் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். தமிழகத்தில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்த போதும் கூட அரசு எகிப்து நாட்டு சின்ன வெங்காயத்தை இறக்குமதி செய்து விற்பனை செய்தது. ஆனால் அந்த சின்ன வெங்காயத்தை தமிழக மக்கள் விரும்பவில்லை. விலை அதிகமாக காணப்பட்டாலும் தமிழ்நாட்டு சின்ன வெங்காயத்தை வாங்கினர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
பெரம்பலூர் மாவட்டத்தில் வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்படும் சின்ன வெங்காயம் சில வணிகர்கள் அதனை விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். அதன்படி பெரம்பலூர் மாவட்ட சின்ன வெங்காயம் சவுதி, துபாய், குவைத், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்னை, திருவனந்தபுரம் விமான நிலையங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் வெளிநாடுகளில் சமையல்களிலும் பெரம்பலூர் மாவட்ட சின்ன வெங்காயம் முக்கிய பங்காற்றுகிறது என்றே கூறலாம்.
7 ஆயிரம் எக்டரில் சாகுபடி
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 7 ஆயிரம் எக்டர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 60 ஆயிரம் டன் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தின் பெரும்பாலும் சின்ன வெங்காயத்தின் தேவையை பெரம்பலூர் மாவட்டமே பூர்த்தி செய்து வருகிறது என்ற பெருமையே பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 7 ஆயிரத்து 900 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, 63 ஆயிரத்து 200 டன் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 630 எக்டர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. சின்ன வெங்காய சேமிப்பு கொட்டகை விவசாயிகளுக்கு மானிய விலையில் அமைத்து கொடுக்கப்படுகிறது, என்று தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புவிசார் குறியீடு
கந்தகச்சத்து நிறைந்த மண் வளம்மிக்க செட்டிகுளம் பகுதியை தமிழகத்தின் சின்ன வெங்காய நாற்றங்கள் என்றே வியாபாரிகள் அழைப்பது உண்டு. இது போன்ற தனித்துவமிக்க பயிராக கருதப்படும் செட்டிகுளம் சின்ன வெங்காயத்துக்கு புவிசார் குறியீடு கேட்டு தமிழக அரசு மூலம் மாவட்ட தோட்டக்கலை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். இன்னும் சில மாதங்களில் செட்டிகுளம் சின்ன வெங்காயத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்து விடும் அலுவலர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலை அமைக்க வேண்டும்
சின்ன வெங்காயத்தை பயன்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான உணவு பொருட்கள் உள்ளிட்டவை தயாரிக்க ஆலத்தூர் தாலுகாவில் தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சாலை அமைத்தால் குறைந்த விலையில் சின்ன வெங்காயம் விற்கும் போது பயனுள்ளதாக இருக்கும், என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஆராய்ச்சி நிலையம் வேண்டும்
சின்ன வெங்காயத்துக்கு அடுத்தப்படியாக மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. பருத்திக்கு வேப்பந்தட்டையில் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. பருத்தி சாகுபடியில் நோய் தாக்குதல், பூச்சி தாக்குதல் இருந்தால் அதனை ஆராய்ச்சி நிலையம் மூலம் அதற்கான தீர்வு கண்டறிந்து சரி செய்யப்படுகிறது. இதேபோல் திருகல் நோய், வேரழுகல் நோய் உள்ளிட்டவையால் பாதிக்கப்படும் சின்ன வெங்காயத்துக்கு தீர்வு காண வசதியாக செட்டிகுளத்தில் ஆராய்ச்சி நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆராய்ச்சி நிலையம் அமைத்தால் விவசாயிகள் பயனுள்ளதாக இருக்கும், மேலும் கூடுதலாக விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய முன்வருவார்கள், என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.