பெரம்பலூர்: கட்டுப்பாட்டை இழந்து தனியார் பள்ளி வேன் மீது மோதிய கார்- கிளீனர் பலி
|பெரம்பலூர் அருகே தனியார் பள்ளி வேன் மீது கார் மோதிய விபத்தில் கிளீனர் உயிரிழந்தார்.
பெரம்பலூர்,
திருச்சி மாவட்டம், துறையூர் தனியார் பள்ளியின் வேன் ஒன்று இன்று காலை பெரம்பலூர்-துறையூர் சாலையில் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மாணவ-மாணவிகளை ஏற்றுவதற்காக சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தது. வேனை
லாடபுரத்தை சேர்ந்த தாமரைக்கண்ணன் (வயது 37) என்பவர் ஓட்டினார். அதே பகுதி காலனி தெருவை சேர்ந்த பச்சமுத்து(50)என்பவர் வேன் கிளீனராக இருந்தார்.
கார் மின்கம்பத்தில் மோதல்
அப்போது எதிரே வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் மோதியது. பின்னர், காரின் பின்பக்கம் பள்ளி வேனின் இடது பக்கம் மோதி விபத்துக்கு உள்ளானது.
அப்போது மின்கம்பம் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக மாணவ-மாணவிகள் யாரும் வேனில் ஏறாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வேனின் பேட்டரி
ஆனால் கார் மோதிய வேகத்தில் வேனின் பேட்டரி தூக்கி அடித்ததில் கீளினர் பச்சமுத்து படுகாயமடைந்தார். காரை ஓட்டி வந்த ரவிச்சந்திரன்(57) காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி படுகாயமடைந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் காயம் அடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கிளீனர் பச்சமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.
ரவிச்சந்திரன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.