திருவாரூர்
பேரளம் தடகள வீரருக்கு சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு
|ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பேரளம் தடகள வீரருக்கு சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இலக்கு என அவர் தெரிவித்தார்.
தங்கப்பதக்கம்
திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களின் மகன் ராஜேஷ் ரமேஷ்(வயது 23). இவர், திருச்சியில் ரெயில்வே டிக்கெட் பரிசோதகராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனாவில் நடந்த ஆசிய போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி சார்பில் ராஜேஷ் ரமேஷ் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார். மேலும் இவர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
சிறப்பான வரவேற்பு
அதனைத் தொடர்ந்து அவர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலும், சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு நேற்று சொந்த ஊரான பேரளத்துக்கு திரும்பினார்.
பேரளம் மாரியம்மன் கோவிலில் அவருக்கு நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர் 6-ம் வகுப்பு படித்த பேரளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் மேள, தாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இலக்கு
மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தி விட்டு அவரை ஊர்வலமாக வாகனத்தில் வாணவேடிக்கையுடன் அழைத்து சென்றனர்.பின்னர் தடகள வீரர் ராஜேஷ் ரமேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹங்கேரியில் நடந்த உலக அளவிலான தடகள போட்டியில் எங்கள் அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது.அப்போது நாங்கள் ஆசிய போட்டியில் கண்டிப்பாக தங்கப் பதக்கம் வெல்வோம் என்று உறுதியாக நம்பினோம். அதேபோல் கலப்பு தொடர் ஓட்டத்தில் நூலிழையில் தங்கப்பதக்கத்தை இழந்தோம். அடுத்த முறை கண்டிப்பாக அதிலும் தங்கம் வெல்வோம். பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதே இலக்கு என்று தெரிவித்தார்.