தேர்தல் மூலம் பா.ஜ.க.விற்கு மக்கள் எச்சரிக்கை - அமைச்சர் துரைமுருகன் பேட்டி
|முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திறமையால் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலூர்,
வேலூரில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திறமையால் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். திராவிட கொள்கையை அடிப்படையாக கொண்ட கட்சிகளுக்கு தான் இனி தமிழகத்தில் எதிர்காலம் என்பதை இந்த தேர்தல் நிரூபித்திருக்கிறது. இந்த தருணத்தை மிகவும் மகிழ்ச்சியாக பார்க்கிறேன்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும் தேசிய அளவில் பா.ஜ.க.வின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. அபரிமிதமான செல்வாக்குடன் தங்களை ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது என்று எண்ணிக் கொண்டிருந்த பா.ஜ.க.விற்கு அப்படி அல்ல; மக்களாகிய நாங்கள் உங்களையும் கேள்வி கேட்க முடியும் என்று இந்த தேர்தல் மூலம் பா.ஜ.க.விற்கு மக்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். பா.ஜ.க.வின் வெற்றி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எனது மகன் கதிர்ஆனந்த் நாடாளுமன்றத்தில் பணியை தொய்வின்றி செய்ய வேண்டும். வேலூர் நாடாளுமன்ற தொகுதி மக்களை அணுகி, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். என்றைக்கும் அவர்களின் தோழனாகவே தன்னை நினைத்து பணியாற்ற வேண்டும் என்று எனது விருப்பத்தை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.