தேனி
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
|பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் மாவட்டத்தில் 6 இடங்களில் இன்று நடக்கிறது.
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பொதுவினியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணவும் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும். அதன்படி இன்று (சனிக்கிழமை) பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் மாவட்டத்தில் 6 இடங்களில் நடக்கிறது.
பெரியகுளம் தாலுகாவில் காமக்காபட்டி, மஞ்சளாறு அணை, தேனி தாலுகாவில் வயல்பட்டி, ஆண்டிப்பட்டி தாலுகாவில் தெப்பம்பட்டி, உத்தமபாளையம் தாலுகாவில் ஓடைப்பட்டி, போடி தாலுகாவில் ராசிங்காபுரம் ஆகிய இடங்களில் கூட்டம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், கடை மாற்றம், தொடர்பான கோரிக்கைகள், புகார்களை தெரிவிக்கலாம்.
மேலும், பொதுமக்கள் தங்கள் குறைகளை முன்கூட்டியே, வட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு சார்பதிவாளர் ஆகியோரிடம் மனுவாக கொடுக்கலாம். முன்கூட்டியே பெறப்படும் புகார்கள், குறைபாடுகள் வகைபாடு வாரியாக பிரிக்கப்பட்டு உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்தில் கொடுக்கப்படும் புகார்கள், குறைபாடுகள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.