செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
|செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஆ.ர.ராகுல்நாத், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 275 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், செங்கல்பட்டு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து கட்டுமானப் பணியின் போது பாம்பு கடித்து விபத்தில் மரணமடைந்த ருத்திரகுமார் என்பவரது குடும்பத்தினருக்கு விபத்து மரண உதவித்தொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இக்குறைதீர்வு நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) லலிதா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சாகிதா பர்வின், மாவட்ட தொழிலாளர் நலன் உதவி ஆணையர் செண்பகராமன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.