காஞ்சிபுரம்
காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரூ.25 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - மாவட்ட கலெக்டர் வழங்கினார்
|காஞ்சீபுரத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வழங்கினார்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து கூட்டத்துக்கு வந்த பொதுமக்களிடம் இருந்து 210 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் உத்திரமேரூர் வட்டம், கட்டியாம்பந்தல், ஆதவப்பாக்கம், காரணை, சேர்ப்பாக்கம் மற்றும் மருதம் கிராமத்தை சேர்ந்த 15 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், காஞ்சீபுரம் வட்டத்திற்குட்பட்ட மேல்ஓட்டிவாக்கம், கூரம் கிராமத்தை சேர்ந்த 20 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், வருவாய் துறையில் பணியின்போது மரணம் அடைந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 3 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினையும், ஆதிதிராவிட நலத்துறை சார்பில் மாநில அளவில் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருது பெற்ற ஆர்.இளங்கோவன் மற்றும் எஸ்.கே.அந்தோனி பால் ஆகிய இருவருக்கும் ரூ.25 ஆயிரத்துக்கான காசோலைகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் பிரகாஷ்வேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.