சிவகங்கை
மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 66 வழக்குகளுக்கு சமரச தீர்வு
|சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 66 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 66 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றங்கள்
தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படி மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள நுகர்வோர் வழக்குகளும் மற்றும் சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான குருமூர்த்தி, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி செந்தில் முரளி மற்றும் வழக்கறிஞர்கள் இந்த வழக்குகளை விசாரித்தனர்.
சமரச தீர்வு
இதில் 2 குற்றவியல் வழக்குகளும், 85 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 19 குடும்ப பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகளும், 16 சிவில் சம்பந்தமான வழக்குகளும், 20 வங்கி கடன் வழக்குகளும் இதுதவிர நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வங்கி கடன் வழக்குகளில் 305 வழக்குகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில் 66 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் வழக்காடிகளுக்கு ரூ.1 கோடியே 41 லட்சத்து 78 ஆயிரத்து 846 கிடைத்தது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.