சேலம்
சேலம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்:149 வழக்குகளுக்கு உடனடி தீர்வுவிபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.1.80 கோடி இழப்பீடு
|சேலம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்:149 வழக்குகளுக்கு உடனடி தீர்வுவிபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.1.80 கோடி இழப்பீடு
சேலம்
சேலம் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 149 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன. இதில், விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.1.80 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான தங்கராஜ் உள்பட நீதிபதிகள், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுகள், மூத்த வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், சங்ககிரி, மேட்டூர், ஆத்தூர், ஓமலூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள கோர்ட்டுகளிலும் நேற்று மக்கள் நீதிமன்றம் நடந்தது. சேலம் உள்பட மாவட்டம் முழுவதும் 8 அமர்வுகள் அமைக்கப்பட்டு அங்கு சமரசம் செய்து கொள்ளும் நில எடுப்பு வழக்குகள், விபத்து வழக்கு, குடும்ப நல, உரிமையியல் என 290 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முடிவில், 149 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. இதன்மூலம் ரூ.13 கோடியே 78 லட்சத்து 87 ஆயிரத்து 703-க்கான தொகை பைசல் செய்யப்பட்டது.
ரூ.1.80 கோடி இழப்பீடு
குறிப்பாக சேலம் கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் தொப்பூர் அருகே 23.8.2021 அன்று நடந்த சாலை விபத்தில் ஷோபனா என்பவரின் தாய், தந்தை மற்றும் தங்கை ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிர் தப்பிய ஷோபனா, இழப்பீடு தொகை கேட்டு சேலம் மோட்டார் வாகன விபத்துக்கான சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் சமரச தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்ட அவருக்கு ரூ.1 கோடியே 80 லட்சத்துக்கான இழப்பீடு தொகைக்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார்.
இதேபோல், 1986-ம் ஆண்டு சின்னக்கவுண்டர் என்பவரின் நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் எடுத்ததின்பேரில் சேலம் முதலாவது கூடுதல் சார்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மாவட்ட முதன்மை நீதிபதி மூலம் நேற்று சமரச தீர்வு காணப்பட்டது. அதாவது, பாதிக்கப்பட்ட சின்னக்கவுண்டருக்கு ரூ.37 லட்சத்து 64 ஆயிரத்து 337-க்கான காசோலை வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 84 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு ரூ.6 கோடியே 43 லட்சத்து 43 ஆயிரத்து 269-க்கு சமரச முறையில் தீர்வு காணப்பட்டதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.