விழுப்புரம்
மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
|மேல்மலையனூர் ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
மேல்மலையனூர்
மேல்மலையனூர் ஒன்றியத்துக்குட்பட்ட கரடிக்குப்பம், நொச்சலூர், பெருவளூர் ஆகிய 3 ஊராட்சிகளை சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட அமைப்பாளர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ராதாகிருஷ்ணன், துணை செயலாளர் முத்துவேல், வட்டசெயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இது குறித்து தகவலறிந்த தாசில்தார் அலெக்சாண்டர், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், வளத்தி இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமதான கூட்டத்துக்கு வருமாறு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்பு தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் மேற்படி 3 ஊராட்சிகளில் அனைத்து மாற்றுதிறனாளிகளுக்கும் தொடர்ந்து ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கப்படும், நிலுவை தொகை வழங்காமல் இருந்தால் உடனடியாக வழங்கப்படும், 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ள கிராமங்களில் அவர்களுக்குள் ஒரு பணித்தள பொறுப்பாளர்கள் நியமித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.