கர்நாடக தேர்தலில் பிரதமர் மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் - கே.எஸ்.அழகிரி
|கர்நாடக தேர்தலில் பிரதமர் மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய தோல்வி ஏற்படப்போகிறது என்பதை உணர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, பல்லாரி பொதுக்கூட்டத்தில் பயங்கரவாதிகளிடம் காங்கிரஸ் கட்சி சரணடைந்து விட்டதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். விரக்தியின் விளிம்பில் இருப்பதால் இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் காங்கிரஸ் மீது அவர் சுமத்தியிருக்கிறார்.
இந்திய விடுதலை போராட்டத்தில் கடுகளவு பங்கு வகிக்காத பா.ஜ.க.வினர் காங்கிரஸ் தலைவர்களின் தியாகத்தை அறிந்துகொண்டு பேசுவது நல்லது. இந்தியா விடுதலை பெற்ற ஒருசில மாதங்களிலேயே ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாத கருத்தினால் ஈர்க்கப்பட்ட பயங்கரவாத சக்திகளினால் விடுதலையைப் பெற்றுத்தந்த மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தியாவில் பயங்கரவாதத்திற்குப் பலியான முதல் தலைவர் மகாத்மா காந்தி அவர்கள் தான்.
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் வரலாறே நச்சு கருத்துகளை பரப்பி, மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து, பயங்கரவாதத்துக்கு துணைபோவது என்பது கடந்தகால வரலாறு. எனவே, பயங்கரவாதத்தை ஆதரித்து ஊக்கப்படுத்துகிற பிரதமர் மோடி, காங்கிரஸின் மீது கூறுகிற குற்றச்சாட்டை மதநல்லிணக்கத்தில் நம்பிக்கை உள்ள கர்நாடக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கர்நாடக தேர்தலில் பிரதமர் மோடியின் அவதூறுப் பிரசாரத்திற்கு உரிய பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என்பது உறுதி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.