கடலூர்
பண்ருட்டி அருகே பரபரப்பு வெடிகுண்டு வெடித்தது போன்று ஏற்பட்ட சத்தத்தால் மக்கள் பீதி; வீடுகளை விட்டு வெளியே ஓட்டம்
|பண்ருட்டி அருகே வெடிகுண்டு வெடித்தது போன்று ஏற்பட்ட சத்தத்தால் மக்கள் பீதியடைந்து, வீடுகளை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.
பண்ருட்டி,
காட்டுத்தீயாய் பரவிய தகவல்
பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம், மேட்டுக்குப்பம், மருங்கூர், கீழக்குப்பம், நடுக்குப்பம், பேர்பெரியான்குப்பம், மேலிருப்பு, கீழிருப்பு, காங்கேயன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள், நேற்று காலை 11.30 மணிக்கு ஒருவித பயங்கர சத்தம் கேட்டதை உணர்ந்தனர்.
அப்போது ஏற்பட்ட அதிர்வில் சில வீடுகளில், இருந்த சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்தது. இதனால் மக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.
மேலும், எங்கோ வெடிகுண்டு வெடித்துவிட்டது, விமானம் விழுந்து விபத்து நேர்ந்துவிட்டது என்று பொதுமக்கள் மத்தியில் காட்டுத்தீயாய் தகவல் பரவியது.
காரணம் என்ன?
இதுபற்றி அறிந்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில், காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் பகுதியில் நேற்று காலை 11.30 மணிக்கு பயிற்சி விமானம் பறந்தது.
இந்த விமானம் மிகவும் தாழ்வாக பறந்த போது, இந்த சத்தம் கேட்டது தெரியவந்தது. இதுபற்றி பொதுமக்கள் மத்தியிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதன்பின்னர் தான் அனைவரும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
இந்த சம்பவத்தால் பண்ருட்டி பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.