< Back
மாநில செய்திகள்
மருத்துவமனைகளுக்கு முககவசம் அணிந்து வந்த பொதுமக்கள்
கரூர்
மாநில செய்திகள்

மருத்துவமனைகளுக்கு முககவசம் அணிந்து வந்த பொதுமக்கள்

தினத்தந்தி
|
2 April 2023 12:06 AM IST

கொரோனா பாதிப்பு உயர்ந்தது எதிரொலியாக கரூர் மாவட்டத்தில் மருத்துவமனைகளுக்கு பொதுமக்கள் முககவசம் அணிந்து வந்தனர்.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இதனையொட்டி முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகள், நோயாளிகள், பார்வையாளர்கள், பணிபுரிபவர்கள், டாக்டர்கள் உள்பட அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு வந்த நோயாளிகள், அவர்களுடன் வந்த பார்வையாளர்கள், பொதுமக்கள் பலர் முககவசம் அணிந்திருந்தனர். ஒருசிலர் முக கவசம் அணியாமல் காணப்பட்டனர். அவர்களை அங்கிருந்த மருத்துவமனை பணியாளர்கள் முக கவசம் அணிய அறிவுறுத்தினர்.

முக கவசம்

இதேபோல மருத்துவமனைகளில் பணியில் இருந்த காவலாளிகளும் முக கவசம் அணிந்து பணியாற்றினர். முன்பு கொரோனா காலத்தில் இருந்ததை போல பொதுமக்கள் பலரும் மருத்துவமனை வளாகத்தில் முக கவசம் அணிந்திருந்ததை காணமுடிந்தது. இதேபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் உள்பட அரசு மருத்துவமனைகளுக்கும் வந்தவர்கள் முககவசம் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்