கோடநாடு விவகாரத்தில் உண்மையை அறிய மக்கள் விரும்புகிறார்கள் -ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
|கோடநாடு விவகாரத்தில் உண்மையை அறிய மக்கள் விரும்புகிறார்கள் என்று மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
மதுரை,
பொது சிவில் சட்டம் நாட்டுக்கு தேவையா? இல்லையா? என்பது பற்றி கருத்து தெரிவிக்க வக்கீல் குழுவிடம் கேட்டிருக்கிறோம். அதுகுறித்த அறிக்கை வந்தவுடன் விரிவான தகவல்கள் தரப்படும். பொது சிவில் சட்டத்தை கைவிடக்கோரி, இந்திய சட்ட ஆணைய தலைவருக்கு தமிழக முதல்-அமைச்சர் கடிதம் எழுதி இருப்பது, அவரது கொள்கை.
உண்மை வெளிவர வேண்டும்
கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்து, ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்தவர் ஜெயலலிதா. அவர் வாழ்ந்த இடம் கோடநாடு எஸ்டேட்.
ஆனால், யாரும் சிந்தித்துப்பார்க்க முடியாத அளவிற்கு அங்கு கொலையும், மிகப்பெரிய கொள்ளையும் நடந்திருக்கிறது. அதுகுறித்து உரிய விசாரணை நடத்தி விரைவாக குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்பது எங்களுடைய தலையாய கோரிக்கை. முன்னாள் முதல்-அமைச்சர் வசித்த பங்களாவிலேயே இந்த சம்பவமா? என மக்கள் ஆழ்ந்த கவலையில் இருக்கிறார்கள். எனவே, உண்மை வெளிவர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அ.தி.மு.க. தொண்டர்களும் விரும்புகிறார்கள்.
உண்மையான குணம்
மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்த்துக்கொள்வோம் என கூறுகிறார்கள். அவர்களுடைய உண்மையான அடிமனதில் இருக்கின்ற குணம், என்னவாக இருக்கிறது என்பதை கட்சி தொண்டர்களும், மக்களும் புரிந்து இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.