< Back
மாநில செய்திகள்
இரும்பு உருக்கு ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
திருப்பூர்
மாநில செய்திகள்

இரும்பு உருக்கு ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

தினத்தந்தி
|
19 Jun 2023 6:58 PM IST

இரும்பு உருக்கு ஆலையை மூட வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன் பொதுமக்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்லடம்

இரும்பு உருக்கு ஆலையை மூட வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன் பொதுமக்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் போராட்டங்கள்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் உருக்கு ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் உள்ளிட்டோர் கடந்த 93 நாட்களாக உண்ணாவிரதப்போராட்டம், காத்திருப்புப்போராட்டம், சாலை மறியல், உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இரும்பு உருக்கு ஆலை கடந்த 2 மாதங்களாக செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அது செயல்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இரும்பு உருக்கு ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அனுப்பட்டியில் அந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாசில்தார் அலுவலகம் முன்பு

இந்த நிலையில் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று பல்லடம் தாசில்தார் அலுவலகம் முன்பு அனுப்பட்டி, பணிக்கம்பட்டி, ஆறாகுளம், அய்யம்பாளையம், புளியம்பட்டி, கரடிவாவி உள்ளிட்ட கிராம மக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி கூறியதாவது:-

97 நாட்களாக தொடரும் பொதுமக்களின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலரும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இரும்பு உருக்கு ஆலைக்கு அனுமதி வழங்கி உள்ளனர்.

நிரந்தரமாக மூட வேண்டும்

ஊராட்சி நிர்வாகத்திடம் கட்டிட அனுமதி பெறாமல் இயங்கி வரும் இரும்பு உருக்கு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனவும் சட்ட விரோதமாக செயல்படும் ஆலைக்கு அனுமதி அளித்த அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுடன் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வராததால் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் காத்திருப்பு போராட்டத்தையொட்டி பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையில், 100- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர்.


மேலும் செய்திகள்