கடலூர்
சிறுபாக்கம் பகுதியில் மின்மாற்றி பழுதால் 14 மணி நேரம் மின்தடை பொதுமக்கள் அவதி
|சிறுபாக்கம் பகுதியில் மின்மாற்றி பழுதால் 14 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
சிறுபாக்கம்,
சிறுபாக்கம் அடுத்த அடரி கிராமத்தில் துணை மின்நிலையம் உள்ளது. இங்குள்ள மின்மாற்றி மூலம் சிறுபாக்கம், மாங்குளம், ரெட்டாக்குறிச்சி, பொயனப்பாடி, காஞ்சிராங்குளம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி மின்மாற்றியில் சாரைபாம்பு சிக்கியதாக தெரிகிறது. இதனால் மின்மாற்றியில் இருந்த பிரேக்கர் வெடித்து பழுதானது.
இதையடுத்து அந்த மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை அதிகாரிகள் சரிவர பராமரிக்கவில்லை என தெரிகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அவதி
நேற்று காலை 7 மணியளவில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இரவு வரை மின்சாரம் வழங்கப்படவில்லை. பின்னர் இரவு 9 மணியளவில் மின்வினியோகம் செய்யப்பட்டது. சுமார் 14 மணி நேரம் ஏற்பட்டமின்தடையால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். குறிப்பாக முதியோர், கைக்குழந்தை வைத்திருப்பவர்கள், பள்ளி மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.
மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சீரமைக்க மின்வாரிய துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.