< Back
மாநில செய்திகள்
போக்குவரத்துப் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் மக்கள் அவதி: அரசு பேச்சு நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்
மாநில செய்திகள்

போக்குவரத்துப் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் மக்கள் அவதி: அரசு பேச்சு நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்

தினத்தந்தி
|
29 May 2023 10:47 PM IST

போக்குவரத்துப் பணியாளர்களுடன் அரசு பேச்சு நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

தனியார் மூலம் ஓட்டுனர்களை நியமிக்கும் முறை கைவிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து, போக்குவரத்துப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு தனியார் நிறுவனங்கள் மூலம் குத்தகை முறையில் ஓட்டுனர்கள் நியமிக்கப்படுவதைக் கண்டித்து மாநகரப் பேருந்து ஓட்டுனர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், சில பணிமனைகளில் இருந்து குறைந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன; பல பணிமனைகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை. திடீர் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாரத்தின் முதல் பணிநாளான இன்று வேலைக்கு வந்த பணியாளர்கள், குறிப்பாக பெண்கள் பணி முடிந்து வீடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். சென்னை வடபழனி, ஆலந்தூர், கிண்டி, நுங்கம்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட பல இடங்களில் பேருந்துகள் கிடைக்காமல் கூட்டம், கூட்டமாக நிற்கின்றனர். புறநகர் தொடர்வண்டிகளிலும், பெருநகரத் தொடர்வண்டிகளிலும் சமாளிக்க முடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. பொதுமக்களின் இந்த அவதி போக்கப்பட வேண்டும்.

சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் 30 பணிமனைகளில் பத்து பணிமனைகளில் தனியார் மூலம் ஓட்டுனர்கள் குத்தகை முறையில் நியமிக்கப்பட்டிருப்பது தான் மாநகரப் போக்குவரத்துக் கழக பணியாளர்களின் போராட்டத்திற்கு காரணம் ஆகும். குத்தகை குறையில் தனியார் ஓட்டுனர்கள் அமர்த்தப்படுவதற்கு பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அதை மதித்து, அந்த முடிவை நிர்வாகம் கைவிட்டிருந்தால் இந்த திடீர் வேலைநிறுத்தம் ஏற்பட்டிருக்காது.

தனியார் மூலம் ஓட்டுனர்களை நியமிக்கும் முறை கைவிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து, போக்குவரத்துப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளர்களும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு திடீர் போராட்டத்தை கைவிட வேண்டும். போக்குவரத்துக் கழக நிர்வாகமும், பணியாளர்களும் பேச்சு நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்