< Back
மாநில செய்திகள்
அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதி

தினத்தந்தி
|
25 May 2023 12:15 AM IST

சிக்கல் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிக்கல்:

சிக்கல் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன் அறிவிப்பின்றி மின்நிறுத்தம்

சிக்கலில் பிரசித்தி பெற்ற சிங்காரவேலர் முருகன் கோவில் உள்ளது. சிக்கல் வடக்கு வீதியில் உள்ள மின்வாரிய அலுவலக கட்டுப்பாட்டில் சிக்கல் பொரவச்சேரி, மஞ்சக்கொல்லை, சங்கமங்கலம், புத்தூர் உள்ளிட்ட 22 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளது. நாகை மேல கோட்டை வாசலில் உள்ள துணை மின்நிலையம் மூலம் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அனைத்து ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக எந்தவித முன் அறிவிப்பும் இன்றி தொடர்ந்து அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பயன்பாட்டுக்கு வராத மின்மாற்றிகள்

எந்த நேரத்தில் மின்நிறுத்தம் செய்யப்படும் என்று எந்தவித அறிவிப்பும் கொடுக்காமல் பகல் நேரத்தில் 2 முதல் 3 மணி நேரம் வரை ஒரே நேரத்தில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. மேலும் தற்போது கோடை காலம் என்பதால் சுட்டெரித்து வரும் வெயிலால் பொது மக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இப்படி முன்அறிப்பின்றி அடிக்கடி மின்நிறுத்தம் செய்வதால் மேலும் சிரமப்பட்டு வருகின்றனர். சிக்கல் பகுதியில் 2 ஆண்டுகளாக தெற்கு வீதி, மெயின் ரோடு பகுதியில் நிறுவப்பட்ட மின்மாற்றிகள் பணி முடிந்தும் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருந்து வருகிறது.

தடையில்லா மின்சாரம்

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சிக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்