< Back
மாநில செய்திகள்
ஒரே நாடு, ஒரே தேர்தலைமக்கள் ஆதரிக்க வேண்டும்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

''ஒரே நாடு, ஒரே தேர்தலைமக்கள் ஆதரிக்க வேண்டும்''

தினத்தந்தி
|
2 Sep 2023 6:47 PM GMT

ஒரே நாடு ஒரே தேர்தலை மக்கள் ஆதரிக்க வேண்டும் என புதுக்கோட்டை அருகே நடைபெற்ற பா.ஜ.க. பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் அண்ணாமலை பேசினார்.

ஒரே நேரத்தில் தேர்தல்

புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க. பொருளாளரும், விஜய் குழுமத்தின் தலைவரும், தொழில் அதிபருமான முருகானந்தத்தின் மகன் கண்ணன்-புவனேஸ்வரி ஆகியோர் திருமண வரவேற்பு விழா ஆலங்குடி அருகே பொன்னன்விடுதியில் நேற்று நடைபெற்றது. விழாவில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நம்முடைய நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற வேண்டும் என்பது பிரதமர் மோடியின் ஆசை. அது ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது தான். சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த பின் நாடாளுமன்ற தேர்தல், அதன்பின் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. ஒரே நேரத்தில் அனைத்து தேர்தலையும் நடத்தி விட்டால், 5 ஆண்டுகள் முடிந்த பின் மறுபடியும் ஒரு தேர்தல் நடத்த வேண்டும் என விரும்புகின்றார்.

கட்சிகள் கலைப்பு

நம் நாடு சுதந்திரம் பெற்றபின்னர் 1952-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் நம் நாட்டின் ஒரே தேர்தல் ஆகும். அதன்பின் 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் ஒரே தேர்தல் தான் நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 1967-க்கு பிறகு 356 பிரிவை பயன்படுத்தி மாநில கட்சிகளை கலைக்க ஆரம்பித்த போது, மாநில ஆட்சிக்கான தேர்தல் வேறு நாட்களிலும், மத்திய அரசிற்கான தேர்தல் வேறு நாட்களிலும் வந்தது.

அடுத்தடுத்து தேர்தல் நடந்தால் அரசு அதிகாரிகள் எப்படி பணியாற்றுவார்கள். தேர்தல் பணியை 6 மாதத்திற்கு முன்பாக அதிகாரிகள் மேற்கொள்ள தொடங்கி விடுகின்றனர்.

ஆட்சிக்கு வந்ததும் கொள்ளை

அரசு அதிகாரிகள் ஏழை மக்களுக்காக வேலை செய்ய வேண்டியவர்கள். ஆனால் தேர்தல் வேலைக்கே நேரம் சரியாக சென்று விடுகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் அரசு அதிகாரிகள் 3 மாதம் வேலை செய்வார்கள். அதன்பின் 5 ஆண்டுகள் மக்களுக்கு சேவகனாக வேலை செய்வார்கள். அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் 4 ஆண்டுகள் கொள்ளையடிக்கின்றனர்.

அடுத்த 5-வது ஆண்டில் தேர்தலுக்கு மக்களுக்கு ரூபாய் நோட்டை கொடுத்து வரவழைக்கின்றனர். கொள்ளையடித்த பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கிறார்கள். அதனால் தான் ஏழை மக்கள் இன்னும் ஏழையாக இருக்கிறார்கள். நடுத்தர மக்கள் இன்னும் நடுத்தர மக்களாக இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும் போது இந்த பிரச்சினை வராது.

மக்கள் ஆதரிக்க வேண்டும்

ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும் போது தேசியத்தின் அடிப்படையில் நடைபெறும். மாநிலத்திற்கு ஒரு ஓட்டு, மத்திய அரசிற்கு ஒரு ஓட்டு என போடுவது உண்டு. இதனால் ஏழை மக்களுக்கு செயல்பட கூடிய அரசு மாநிலத்திலும், மத்தியிலும் இருக்கிற அரசாக அமையும். பிரதமரின் முடிவை மக்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க. தொண்டர்கள் தயாராக வேண்டும். இன்னும் 7 மாதங்கள் தான் தேர்தலுக்கு உள்ளது. புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மறுபடியும் உருவாக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் பரிசீலனையில் உள்ளது.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

திருமண வரவேற்பில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் உள்பட பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவுக்கு வந்தவர்களை மேற்கு மாவட்ட பொருளாளர் முருகானந்தமும், அவரது மனைவியும், முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவருமான காந்திமதி முருகானந்தம் ஆகியோரும், மணமகளின் குடும்பத்தினரும் வரவேற்றனர்.

மேலும் செய்திகள்