தஞ்சாவூர்
அரசு திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
|அரசு திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
அரசு திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
புதிய கட்டிடங்கள் திறப்பு விழா
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பண்ணவயல் ஊராட்சியில் ரூ.10.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், சேதுபாவாசத்திரம் அருகே கங்காதாரபுரம் ஊராட்சியில் ரூ.13.37 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், குப்பத்தேவன் ஊராட்சியில் ரூ.14.08 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட உணவு தானிய சேமிப்பு கிடங்கு கட்டிடம் ஆகியவற்றை கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
மேலும் அவர், ஒட்டங்காடு ஊராட்சியில் ரூ.10.19 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், திருச்சிற்றம்பலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.26 லட்சத்தில் கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்கள், பூவாளூர் ஊராட்சியில் ரூ.13.65 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், நெய்வேலி வடக்கு ஊராட்சியில் ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், செவ்வாய்பட்டியில் ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், மணிக்கிரான்விடுதியில் ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
கட்டணமில்லா பஸ் பயணம்
தொடர்ந்து அவர், பாதிரான்கோட்டை வடக்குஊராட்சியில் ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், அக்கரைவட்டம் ஊராட்சி கஞ்சிரான்கடையில் ரூ.10.19 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் என மொத்தம் ரூ.1 கோடியே 45 லட்சத்தில் 67 ஆயிரம் மதிப்பில் 11 புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், பெண்களுக்கான கட்டணமில்லா பஸ் பயணம், அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை வருகிற 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
விழிப்புணர்வு
அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கடமை அந்தந்த பகுதியை சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ளது என்றார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், அசோக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், ஒன்றியக்குழு தலைவர்கள் பார்வதி சிவசங்கர், செல்வம் சவுந்தர்ராஜன், பழனிவேல், முத்துமாணிக்கம், சசிகலா ரவிசங்கர், அமுதா செந்தில், வருவாய் கோட்டாட்சியர் அக்பர்அலி, வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.