விடுமுறை முடிந்து சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பும் மக்கள்: செங்கல்பட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்
|தொடர் விடுமுறை முடிந்து மக்கள், தங்களது சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பி வருவதால், செங்கல்பட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை,
வார விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது.
இந்த நிலையில், சொந்த ஊர் சென்ற சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், தொடர் விடுமுறை முடிந்து தற்போது சென்னை திரும்பி வருகின்றனர்.
பேருந்துகள் மட்டுமின்றி, சொந்த கார்கள் மற்றும் இருசக்க வாகனங்களில் மக்கள் தற்போது சென்னை திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக, செங்கல்பட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் பகுதியில் 5 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் வாகனங்கள், ஒரே நேரத்தில் சாலைகளை ஆக்கிரமித்துள்ளதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.