திருவள்ளூர்
குடியிருப்பு பகுதியில் சடலத்தை எரிப்பதை கண்டித்து கலெக்டர் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
|குடியிருப்பு பகுதியில் சடலத்தை எரிப்பதை கண்டித்து கலெக்டர் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், அதிகத்தூர் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளான மின்விளக்கு, சாலை வசதி, வீட்டுமனை பட்டா உள்பட எந்த வகையான வசதிகளும் செய்து தரப்படவில்லை என தெரிகிறது.
மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் பாம்புகள், தேள் என விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அதிகத்தூரை சேர்ந்த பொதுமக்கள் நேற்றுமுன்தினம் மாலை திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பின்னர் இதுத் தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அதிகத்தூர் நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு அருகில் இறந்தவர்களை புதைத்தும், எரித்தும் வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சுடுகாடு, எரிமேடை, சுற்றுசுவர் போன்றவை அமைத்துக் கொடுத்தும் அந்த இடத்தை பயன்படுத்தாமல் குடியிருப்பு பகுதிக்கு அருகில் இறந்தவர்களின் உடலை எரித்து வருவதால் புகை மற்றும் துர்நாற்றத்தால் அந்த பகுதி மக்கள் சுவாசிக்க முடியாமலும் உணவு அருந்த முடியாமலும் அவதிப்படுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட அவர்கள் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரை நேரில் சந்தித்து முறையிட வந்தனர். ஆனால் கலெக்டர் வேறு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியே சென்றதால் கலெக்டர் அலுவலகத்தில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என கூறி 50-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் வீட்டிற்கு நடந்தே சென்றனர். மேலும் அவர்கள் கலெக்டர் வீட்டின் நுழைவாயில் முன்பு அமர்ந்து தங்களுக்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் தாங்கள் கொண்டு வந்த ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை கலெக்டர் வீட்டின் எதிரே உள்ள சாலையின் வீசி தங்களுக்கு தீர்வு காணக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருவள்ளூர் தாசில்தார் மதியழகன், வருவாய் ஆய்வாளர் விஷ்ணு பிரியா, திருவள்ளூர் டவுண் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி, மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தாசில்தார் மதியழகன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதியில் நேரில் ஆய்வு செய்து இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக கூறிய அவர்களுடம் அதிகத்தூர் கிராமத்திற்கு சென்றனர். அங்கு குடியிருப்பு பகுதியில் இறந்தவர்ளை புதைக்கவோ, எரிக்கவோ கூடாது என அங்கேயும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அதிகத்தூரிலும் பரபரப்பு காணப்பட்டது.