< Back
மாநில செய்திகள்
ஊராட்சி செயலாளரை கைது செய்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

ஊராட்சி செயலாளரை கைது செய்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

தினத்தந்தி
|
14 July 2022 9:44 PM IST

கலசபாக்கம் அருகே ஊராட்சி செயலாளரை கைது செய்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கலசபாக்கம்

கலசபாக்கம் அருகே ஊராட்சி செயலாளரை கைது செய்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஊராட்சி செயலாளர் கைது

கலசபாக்கம் அருகே காம்பட்டு கிராமத்தில் பச்சையம்மன் கோவில் உள்ளது இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் முடிகாணிக்கை டெண்டர் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் விடப்பட்டது.

இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி செயலாளராக இருக்கும் சின்னபையன் மற்றும் மணி ஆகியோர் ஏலம் எடுக்க முன் பணம் கட்டியிருந்தனர்.

இதில் மணிக்கு ஏலம் கிடைத்து விட்டது. இருப்பினும் கடந்த காலங்களில் அக்கோவிலை பராமரித்து வந்தது, பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து வந்தது என அனைத்தையும் சின்னபையன் மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்தநிலையில் இந்த ஏலத்தையும் அவர் எடுத்திருந்தால் கோவிலுக்கு மக்களின் வருகை அதிகரித்திருக்கும் என கிராமத்தில் ஒருவருக்கொருவர் வாய் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதன் பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் அளவிற்கு பிரச்சினை அதிகரித்தது.

இதையடுத்து கலசபாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமிபதியிடம் மணி கொடுத்த புகாரின் பேரில் சின்னபையன், சுமதி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னபையனை கைது செய்தனர்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அதே கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏலம் விடும் இடத்தில் என்ன நடந்தது என்று இருதரப்பையும் விசாரிக்காமல் போலீசார் ஒரு தலை பட்சமாக செயல்படுகிறார்கள் என்று கூறி கலசபாக்கம் பஸ் நிறுத்தம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்