தஞ்சாவூர்
நெடுஞ்சாலை பணிகளை தடுத்து நிறுத்தி மக்கள் போராட்டம்
|போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறி நெடுஞ்சாலை பணிகளை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறி நெடுஞ்சாலை பணிகளை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுஞ்சாலை பணிகள்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா தேவராயன்பேட்டை ஊராட்சியில் கருப்பூர், பொன்மான் மேய்ந்தநல்லூர் உள்ளிட்ட இடங்களில் தஞ்சை- விக்ரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலை பணியால் கருப்பூர், பொன்மான் மேய்ந்தநல்லூர் பகுதியில் கிராம இணைப்பு சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதனால் இந்த 2 கிராம மக்களும், கிராம இணைப்பு சாலைக்கு பதிலாக மாற்று வழிச்சாலை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். ஆனால் மாற்று வழிச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை நெடுஞ்சாலை துறையினர் எடுக்கவில்லை.
பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டம்
இந்த நிலையில் நேற்று கிராமமக்கள் கருப்பூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மாற்று வழிச்சாலை அமைக்க வலியுறுத்தி கிராமமக்கள் நெடுஞ்சாலை பணிகளை தடுத்து நிறுத்தி, சாலை பணிக்காக சென்ற வாகனங்களை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராமமக்களின் கோரிக்கையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண்பது எனவும், இதுதொடர்பாக பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்துவது எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டம் காரணமாக தஞ்சை- விக்ரவாண்டி நெடுஞ்சாலை பணிகள் பல மணிநேரம் பாதிக்கப்பட்டது.