மயிலாடுதுறை
அடிக்கடி மூடப்படும் 'கேட்'; ரெயிலை மறித்து பொதுமக்கள் போராட்டம்
|மயிலாடுதுறை ரெயில் நிலையம் அருகே அடிக்கடி கேட் மூடப்படுவதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை ரெயில் நிலையம் அருகே அடிக்கடி கேட் மூடப்படுவதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை ரெயில் நிலையம்
சென்னை- திருச்சி வழித்தடத்தில் உள்ள மயிலாடுதுறை ரெயில் நிலையம் முக்கிய சந்திப்பாகும். சென்னை, திருச்சி மார்க்கம் மட்டுமல்லாமல் திருவாரூர் மார்க்கமாகவும் சேர்த்து 25-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட சரக்கு ரெயில்கள் மயிலாடுதுறை வழியாக இயக்கப்படுகின்றன. மயிலாடுதுறையில் இருந்து கோவை, மைசூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், விழுப்புரம் ஆகிய ஊர்களுக்கும் ரெயில்கள் புறப்பட்டு செல்கின்றன.
இதனால் மயிலாடுதுறை ரெயில் நிலையம் அருகே உள்ள மாப்படுகை ரெயில்வே கேட் ஒரு நாளைக்கு 50-க்கும் மேற்பட்ட முறை மூடப்பட்டு, கல்லணை- பூம்புகார் சாலையில் வரும் வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுகின்றன.
ரெயில் மறியல்
அதோடு மாப்படுகை, சோழம்பேட்டை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாணவர்கள் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை திருவாரூரில் இருந்து 1-வது பிளாட்பாரத்திற்கு வந்த ரெயிலை 4-வது பிளாட்பாரத்தில் நிறுத்துவதற்காக ரெயில் பாதை மாற்றும் போது கேட் மூடப்பட்டது. இதனால் அங்கு சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வக்கீல் குபேந்திரன் தலைமையில் திடீரென பாதை மாற்றுவதற்காக வந்த ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை ரெயில் நிலைய மேலாளர் சங்கர்குரு, ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதிர்சிங், மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேம்பாலம்
அப்போது இனி காலை நேரத்தில் நிலையத்துக்கு வரும் ரெயில்களை காலை 10 மணிக்கு மேல் பிளாட்பாரம் மாற்றி நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிலைய மேலாளர் தெரிவித்தார். மேலும் பூம்புகார்- கல்லணை சாலையில் மயிலாடுதுறை மாப்படுகை ரெயில்வே கேட் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த மறியல் போராட்டம் 10.30 மணிக்கு முடிந்தது. இதன் காரணமாக பூம்புகார்- கல்லணை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.