மயிலாடுதுறை
சீர்காழி அருகே, மழை வெள்ள சேதங்களை பார்வையிட அதிகாரிகள் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
|சீர்காழி அருகே மழை வெள்ள சேதங்களை பார்வையிட அதிகாரிகள் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சீர்காழி அருகே மழை வெள்ள சேதங்களை பார்வையிட அதிகாரிகள் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மணி கிராமம் பகுதியில் 250 ஏக்கர் விளை நிலங்களை மழைநீர் சூழ்ந்தது. ஏராளமான வீடுகளையும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட வரவில்லை என கூறி நேற்று மாலை பொதுமக்கள் மணி கிராமத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே பூம்புகாரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடுவது குறித்து தகவல் அறிந்து மணி கிராமம் பகுதிக்கு சென்றார்.
பேச்சுவார்த்தை
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் மழை நீரால் சூழப்பட்ட பாபுஜி நகர் பகுதிக்கு பொதுமக்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
பேச்சுவார்த்தையின் போது சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பஞ்சு குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் பூம்புகார் ரவி, திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் பூம்புகார்-சீர்காழி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.