திருவாரூர்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
|திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொத்தமங்கலம் ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ராஜகொத்தமங்கலம், சிதம்பரகொத்தமங்கலம், பெரிய கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படுவது இல்லை என கூறியும், குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தக்கோரியும் கிராம மக்கள் திடீரென காலிக்குடங்களுடன் பள்ளங்கோவில் கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது குடிநீர் வினியோகத்தை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதன்பேரில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக திருத்துறைப்பூண்டி -மன்னார்குடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.