< Back
மாநில செய்திகள்
மணல் லாரிகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி கிராம மக்கள் சாலை மறியல்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

மணல் லாரிகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி கிராம மக்கள் சாலை மறியல்

தினத்தந்தி
|
14 Jun 2022 7:58 PM GMT

மணல் லாரிகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவையாறு:-

மணல் லாரிகளை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மணல் குவாரி

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள சாத்தனூர், மருவூர், வடுககுடி ஆகிய கிராமங்கள் வழியாக கொள்ளிடம் ஆறு செல்கிறது. இந்த பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி இயங்கி வருகிறது. மணல் குவாரி தொடங்கிய நாள் முதல் அந்த பகுதியில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் சென்று வருகின்றன.

மணல் எடுப்பதற்காக ஆச்சனூர் மெயின்ரோட்டிலும், பள்ளிக்கூடம் அருகிலும் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர். இந்த நிலையில் மணல் ஏற்றி செல்லும் லாரிகளால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை கண்டித்தும், ஆசனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு லாரிகளை நிறுத்துவதை கண்டித்தும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திருவையாறு - திருக்காட்டுப்பள்ளி சாலை ஆச்சனூர் மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு பள்ளி மேலண்மைக்குழு தலைவர் சிவசக்தி தலைமை தாங்கினார்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு தாசில்தார் பழனியப்பன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் ஆச்சனூர் மெயின்ரோட்டிலும், பள்ளி அருகிலும் மணல் லாரிகளை நிறுத்தாமல் இருக்கவும், மாணவ, மாணவிகளுக்கு இடையூறு இல்லாமல் லாரிகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்