திருவள்ளூர்
ஆவடி அருகே ஆள் மாறாட்டம் செய்து ரூ.27 கோடி நிலம் மோசடி - 3 பேர் கைது
|ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ஆள் மாறாட்டம் மூலம் ரூ.27 கோடி நிலம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் வசிப்பவர் ஆனந்த் (வயது 51) இவர் சென்னையில் உத்தண்டி பகுதியில் தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவரது தாயார் பட்டம்மாள் (73). சென்னை ஆழ்வார் பேட்டையில் வசிக்கும் பட்டமாளின் சகோதரர் வீரராகவன் மற்றும் சகோதரி அலமேலு ஆகியோருக்கு சொந்தமாக பூந்தமல்லி அடுத்த மாங்காடு பகுதியில் 29 ஏக்கர் 46 சென்ட் நிலம் உள்ளது. கடந்த 1960-ம் ஆண்டு வாங்கிய இந்த காலி மனையை பட்டமாளின் மகன் டாக்டர் ஆனந்த் வந்து பார்த்தபோது, அந்த இடத்தை வெரோரு நபர் ஆக்கிரமித்து இருப்பது போல் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து குன்றத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வில்லங்கச் சான்று எடுத்து பார்த்தபோது, பூந்தமல்லி அடுத்த மாங்காடு பாலண்டீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (57) என்பவர் பெயரில் 9 ஏக்கர் 21 சென்ட் நிலம் பத்திரப்பதிவாகி இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆனந்த் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்படி, துணை போலீஸ் கமிஷனர் பெருமாள் ஆலோசனைப்படி உதவி போலீஸ் கமிஷனர் பொன்சங்கர் மேற்பார்வையில், நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பூந்தமல்லி அருகே உள்ள தனியார் கல்லூரியின் உரிமையாளரான ராதாகிருஷ்ணன் என்பவர் வெங்கடேசன் பெயரில் பொது அதிகாரம் பெற்று போலியான ஆவணங்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து குன்றத்தூர் பத்திரபதிவு அலுவலகத்தில் அவரது பெயருக்கு பத்திரப்பதிவு செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வெங்கடேசனை கைது செய்ததோடு அவருக்கு உடந்தையாக இருந்த சென்னை நந்தம்பாக்கம் பாலாஜி நகரை சேர்ந்த அசோக்குமார் (35) மற்றும் மாங்காடு பாலண்டீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த முத்து (40) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அதன் பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நேற்று திருவள்ளூர் நில அபகரிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.27 கோடி என்று கூறப்படுகிறது.