அரியலூர்
அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் அஸ்தினாபுரம் மக்கள்
|அஸ்தினாபுரம் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அஸ்தினாபுரம் கிராமம்
அரியலூரில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் அஸ்தினாபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஒரு அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்குள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போதுமான அளவிற்கு செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த மக்களுக்கென்று தனியாக மயான கொட்டகை இல்லை. இங்கு ஏற்கனவே ஒரு மயான கொட்டகை உள்ளது. ஆனால் அங்கு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களின் உடல்களை மட்டுமே எரியூட்ட அனுமதிக்கின்றனர். இதனால் தற்போது வரை பட்டியல் இன சமூகத்தை சார்ந்த மக்களில் இறந்தவர்களை தரையில் வைத்து தான் தகனம் செய்ய வேண்டிய அவலம் உள்ளது.
மழைக்காலங்களில் சிரமம்
மயானத்தில் கொட்டகை இல்லாததால் மழைக்காலங்களில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதுகுறித்து பல்வேறு அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் இங்குள்ள 150 குடும்பத்திற்கும் என மொத்தம் 4 குடிநீர் குழாய்களே உள்ளன. அதில் வரும் தண்ணீரும் சுத்தமின்றி, குடிப்பதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
பிரதமரின் ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து கிராமத்தில் உள்ள வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் தற்போது வரை அதற்கான அறிகுறியே இல்லை என அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
8 கிலோமீட்டர் தூரம்
வக்கீலுக்கு படித்து வரும் சதீஷ்குமார்:- எங்கள் கிராமத்தில் உள்ள மயானத்தில் பல ஆண்டுகளாக கொட்டகை இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. மழைக்காலங்களில் எங்கள் பகுதியை சேர்ந்த யாராவது இறந்தால் அவர்களது உடலை தகனம் செய்வதில் சிரமமாக உள்ளது. மேலும் இந்த கிராமத்தில் எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லை. பொது குழாயில் வரும் குடிநீர் போதுமான அளவில் இல்லை. மேலும் அந்த குடிநீர் சுத்தமாகவும் இல்லை. இதனால் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. அவசரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் கர்ப்பிணிகள், முதியவர்கள் உள்ளிட்டோர் கடும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஜல்ஜீவன் திட்டம்
தையல் தொழிலாளி சக்திவேல்:- அஸ்தினாபுரம் கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இந்தநிலையில் பிரதமரின் ஜல்ஜீவன் திட்டத்தில் எங்கள் கிராமத்திற்கும் தண்ணீர் கிடைக்கும் என ஆவலுடன் காத்திருந்தோம். ஆனால் தற்போது வரை எங்களுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்படவில்லை. அதோடு பல நேரங்களில் பஸ் நிறுத்தங்களில் பஸ் நிற்பதில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் அவதியடைகின்றனர். எனவே அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.
விளையாட்டு மைதானம்
மாணிக்கம்:- இந்த பகுதியில் ஒரு விளையாட்டு மைதானம் இருந்தது. அதில் இருந்த உபகரணங்களை ஒரு சில காரணங்களுக்காக அகற்றினார்கள். தற்போது வரை மீண்டும் வைக்கப்படவில்லை. இதனால் தற்போது அந்த மைதானம் உபயோகமற்று கிடக்கிறது. மேலும் இங்குள்ள மயானத்தில் கொட்டகை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மழை பெய்யும்போது இறந்தவர்களை தகனம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அடிப்படை வசதிகள் வேண்டும்
ஆட்டோ டிரைவர் நடராஜ் :-
எங்கள் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். ஆனால் தற்போது வரை இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் அவசர நேரங்களில் பலர் ஆட்டோவுக்காகவும், பஸ்சுக்காகவும் காத்திருக்கின்றனர். பல சமயங்களில் இங்கு பஸ்கள் நிற்பதில்லை. வெளியூர்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் இதனால் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.