< Back
மாநில செய்திகள்
மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை டெங்கு ஒழிப்பு பணிகள் சிறப்பாக உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை
மாநில செய்திகள்

மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை டெங்கு ஒழிப்பு பணிகள் சிறப்பாக உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தினத்தந்தி
|
17 Oct 2023 12:31 PM IST

டெங்கு ஒழிப்பு - விழிப்புணர்வு பணிகள் சிறப்பாக உள்ளது. மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை சைதாப்பேட்டையில் கனமழையின் காரணமாக பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து, ஒரு வாரத்திற்கு மேல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 8 பேருக்கு தலா ரூ.12,700, 3 நாட்களுக்கு மேல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 3 பேருக்கு தலா ரூ.4,300, விபத்தில் இறந்த ஒருவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் என நிவாரண உதவிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மழைக் காலங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டும், குழு ஒன்றை அமைத்து புதியதாக எங்கெங்கே மழைநீர் வடிகால்கள் அமைய வேண்டும் என்று திட்டம் தீட்டப்பட்டு குழுவின் அறிக்கை பெறப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக சென்னையில் மழைநீர் வடிகால்கள் கட்டும் பணி முழுமை பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போதும் பெரிய அளவிலான பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது.

மேலும், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.2,898.89 கோடி செலவில், 878.78 கி.மீ. நீளத்திற்கு புதிய மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டு உள்ளது. எனவே சென்னையில் மழைநீர் தேக்கம் 100 சதவீதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி உருவான ஏறத்தாழ 340 ஆண்டு காலத்தில், மாநகர எல்லையில் உள்ள மழை நீர் வடிகால்களின் அளவு 2,073.4 கி.மீ ஆகும். கடந்த 2 ஆண்டு காலத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட 878.78 கி.மீ தூரத்தோடு இணைத்து, இன்று 2,952.12 கி.மீ ஆக உயர்ந்திருக்கிறது. ஆண்டு தோறும் இந்த மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.24.55 கோடி செலவில், 1,501.45 கி.மீ தூரத்திற்கு மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டு உள்ளது. புதிய மழைநீர் வடிகால்களை கட்டியும், ஏற்கனவே இருக்கின்ற மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாரியும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் சைதாப்பேட்டையில் திருவள்ளூவர் சாலை, சுப்பிரமணியம் சாலை, மடுவின்கரை, திவான் பாஷ்யம் சாலை, வடிவேல் தெரு போன்ற பல்வேறு தெருக்களில் புதிய மழைநீர் வடிகால்வாய்கள் ரூ.56 கோடி செலவில் 13.56 கி.மீ. தூரத்திற்கு கட்டப்பட்டு உள்ளது. 12 கி.மீ. தூரத்திற்கான மழைநீர் வடிகால்வாய்கள் ரூ.1.5 கோடி செலவில் தூர்வாரப்பட்டு உள்ளது.

இந்த 2 ஆண்டுகள் தான் டெங்கு வரலாற்றிலேயே அதிகமான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்த ஆண்டு டெங்கு பாதிப்புகள் 5 ஆயிரத்துக்கு உள்ளேயே உள்ளது. ஆஸ்பத்திரிகளில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 400-க்குள்ளேயே உள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக பதிவாகி இருக்கிறது.

இன்னும் இரண்டு மாதம் மட்டுமே உள்ளது. நவம்பர், டிசம்பர் மாதம் முடிவதற்குள், இந்த பாதிப்பு 6 ஆயிரமாக கூட தாண்ட வாய்ப்பில்லை என்று கருதுகிறோம். பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை, எனவே அச்சம் கொள்ளத் தேவையில்லை.

போதுமான அளவிற்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. போதுமான அளவிற்கு மருந்துகள் கையிருப்பும் இருக்கின்றது. சென்னையில் டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் சென்னை மாநகராட்சி சார்பாக மிகச்சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

திருச்செங்கோடு ஆஸ்பத்திரியில் குழந்தை விற்கப்படுகிறது என்ற அரசல் புரசலான செய்தி பரவியது. விசாரணை மேற்கொண்டதில் மிக நீண்ட வருடங்களாக லோகம்பாள் என்ற பெண் இடைத்தரகராக இந்த பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்திருக்கிறது. அனுராதா என்ற மகப்பேறு டாக்டரும் உடந்தையாக இருந்திருக்கிறார். திருச்செங்கோடு ஆஸ்பத்திரியில் மட்டுமே இந்த சம்பவம் நடந்துள்ளதா? அல்லது இதில் பெரிய அளவில் ஏதாவது குழு ஒன்று செயல்பட்டு வருகிறா? என்று விசாரணை மேற்கொள்ள சொல்லி இருக்கிறோம்.

மேலும் இவர்கள் இரண்டு பேரை தீவிரமாக விசாரணை செய்ததில் சிறுநீரகம் விற்பனையும் கூட நடந்துள்ளதாக தெரிய வருகிறது. விசாரணைகளுக்குப் பிறகு இதில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்று முழுமையாக கண்டறிந்து அவர்கள் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்