< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில் உள்ளவர்களே காரணம் டி.டி.வி.தினகரன் பேட்டி
மாநில செய்திகள்

"அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில் உள்ளவர்களே காரணம்'' டி.டி.வி.தினகரன் பேட்டி

தினத்தந்தி
|
1 April 2023 3:28 AM IST

“அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில் உள்ளவர்களே காரணம்'' என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக நீதிமன்ற தீர்ப்பின்படி எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார், இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். இது நீண்ட நெடிய சட்ட போராட்டமாக இருக்கும். ராமாயணத்தில் வாலி என்பவர் எதிர்மறையான கதாபாத்திரம். அந்த வாலி என்ற வில்லன் போல் தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். வாலி போல 2 முறை அவர் வெற்றி பெற்றுள்ளார். இனிமேல் அப்படி வெற்றி இருக்காது.

நாங்கள் யாருடன் கூட்டணி அமைப்போம்? என்பது தேர்தலுக்கு முன்பாக அறிவிப்போம்.

இந்தி திணிப்பை ஒருபோதும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் தான் தயிருக்கு 'நஹி' என்று சொல்லிவிட்டார்கள்.

மத்தியில் உள்ளவர்களே காரணம்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்திற்கும் மத்தியில் உள்ளவர்கள்தான் காரணம். அவர்கள்தான், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை இணைந்து வைத்தார்கள். எனவே மீண்டும் அவர்களை மத்தியில் இருப்பவர்கள் இணைக்கலாம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மத்தியில் ஆள்பவர்கள் அ.தி.மு.க.வில் நினைத்ததை எல்லாம் செய்கிறார்கள்.

ஆன்லைன் ரம்மி தடை மசோதா கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு மக்களின் உயிருடன் விளையாடாமல், எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் அதனை கவர்னர் நிறைவேற்றி தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்