பாஜக தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து இழைத்து வரும் துரோகத்திற்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர் - கே.பாலகிருஷ்ணன்
|பாஜக தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து இழைத்து வரும் துரோகத்திற்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
பாஜக கடைப்பிடித்து வரும் மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளுக்கும், தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து இழைத்து வரும் துரோகத்திற்கும் தமிழ்நாடு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் மதச்சார்பாற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகத்தான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த அமோக வெற்றிக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த 2 ஆண்டு காலத்தில் திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்களும் இவ்வெற்றிக்கு பின்புலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுக- பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது. பாஜக கடைப்பிடித்து வரும் மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளும், தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து இழைத்து வரும் துரோகத்திற்கும் தமிழ்நாடு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர். தொடர்ந்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்பதற்கான முன்னோட்டம்தான் இது என்பதை இந்த தேர்தல் முடிவு எடுத்துக்காட்டுகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.