திருவாரூர்
10 ஆண்டுகளாக பழுதடைந்த நடைபாலத்தை பயன்படுத்தி வரும் மக்கள்
|10 ஆண்டுகளாக பழுதடைந்த நடைபாலத்தை பயன்படுத்தி வரும் மக்கள்
கூத்தாநல்லூர் அருகே 10 ஆண்டுகளாக பழுதடைந்த நடைபாலத்தை பயன்படுத்தி வரும் கிராம மக்கள் புதிதாக பாலம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடைபாலம்
கூத்தாநல்லூர் அருகே அகரப்பொதக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமம் வெள்ளையாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இதனால் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் ஆற்றை கடந்து சென்று வருவதற்கு ஏதுவாக 40ஆண்டுகளுக்கு முன்பு நடைபாலம் அமைக்கப்பட்டது.
இந்த பாலத்தை அகரப்பொதக்குடி, ஆய்குடி, வாழச்சேரி, கண்கொடுத்தவனிதம், அத்திக்கடை, பொதக்குடி, திருமாஞ்சோலை, புதுக்குடி, பூதமங்கலம், காவாலக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 30- க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், அங்கன்வாடி பள்ளிகளில் படிக்கும் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சாய்ந்து விழும் நிலையில்
இந்த பாலம் கடந்த 10 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. பாலத்தின் முகப்பில் உள்ள தடுப்பு சுவர்கள் மற்றும் பாலத்தை தாங்கி நிற்கும் கம்பிகள் பழுதடைந்து பலம் இழந்து உள்ளது. மேலும் பாலம் நடு மையத்தில் ஆற்றுக்குள் உள்வாங்கியது போல, ஆற்றுக்குள் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் காணப்படுகிறது.
புதிய பாலம் கட்டித்தர வேண்டும்
இதனால் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வரும் போது, பாலம் ஆற்றில் அடித்துச்செல்லப்படுமோ என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக பழுதடைந்த பாலத்தையே பயன்படுத்தி வரும் மக்கள் அதனை கடந்து சென்று வருவதில் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே பழுதடைந்த நடைபாலத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிதாக அகலமான பாலம் கட்டித்தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.