< Back
மாநில செய்திகள்
கடலூரில் பூஜை பொருட்கள்வாங்க குவிந்த பொதுமக்கள்
கடலூர்
மாநில செய்திகள்

கடலூரில் பூஜை பொருட்கள்வாங்க குவிந்த பொதுமக்கள்

தினத்தந்தி
|
31 Aug 2022 12:41 AM IST

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கடலூரில் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் குவிந்தது. பூக்களின் விலையும் கிடு, கிடுவென உயர்ந்தது.

கடலூர்,

விநாயகர் சதுர்த்தி விழா இன்று (புதன்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இருப்பினும் இந்த விழாவை கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது 10 அடிக்கு மேல் விநாயகர் சிலையை நிறுவக்கூடாது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலையை கரைக்க வேண்டும்.

ரசாயனக் கலவை கொண்ட சிலையை அமைக்கக்கூடாது போன்ற பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் உரிய அனுமதியுடன் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. கடலூரில் மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், தற்காலிக உழவர் சந்தை, செம்மண்டலம், பான்பரி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

50 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்கப்படுகிறது.

பழங்கள் விற்பனை

முக்கிய இடங்களில் வைத்து வழிபடுவதற்காக பெரிய அளவிலான விநாயகர் சிலைகளும் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர விநாயகருக்கு வைத்து படையல் செய்வதற்காக விளாம்பழம், பேரிக்காய், சோளம், அவல், பொரி, கடலை உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர அருகம்புல், வண்ண சிறிய குடைகளும் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது பன்னீர் கரும்புகளும்விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கட்டு ரூ.200, ரூ.250 என விற்பனை செய்யப்படுகிறது.

வாழைப்பழம், வெற்றிலை, பாக்கும் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இந்த பொருட்களை வாங்குவதற்காக கடைவீதியில் பொதுமக்கள் கூட்டம் குவிந்தது.

பூக்கள் விலை உயர்வு

இதேபோல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்களின் விலையும் கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ அரும்பு ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது 2 நாட்களாக ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட குண்டு மல்லி நேற்று ரூ.800 -க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.500க்கு விற்ற கனகாம்பரம் ரூ.600-க்கும், ரூ.240-க்கு விற்ற சாமந்தி ரூ.280-க்கும், ரூ.160-க்கு விற்ற சம்பங்கி ரூ.280-க்கும், ரூ.20-க்கு விற்ற கேந்தி ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்