< Back
மாநில செய்திகள்
புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
சேலம்
மாநில செய்திகள்

புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க குவிந்த பொதுமக்கள்

தினத்தந்தி
|
23 Oct 2022 1:30 AM IST

சேலத்தில் நேற்று தீபாவளி விற்பனை களை கட்டியது. புத்தாடைகள், பட்டாசுகள் வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்தனர்.

சேலத்தில் நேற்று தீபாவளி விற்பனை களை கட்டியது. புத்தாடைகள், பட்டாசுகள் வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்தனர்.

தீபாவளி பண்டிகை

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வெளியூர்களில் வசித்து வருபவர்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதையொட்டி பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் ரெயில்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் கடைவீதியில் தீபாவளி விற்பனை களை கட்டியது. நேற்று விடுமுறை நாள் என்பதால் ஆண்களும், பெண்களும் தங்களது குடும்பத்தினருடன் ஜவுளி எடுக்க கடைவீதிக்கு வந்திருந்தனர். சேலம் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் ஜவுளி மற்றும் இதர பொருட்கள் வாங்குவதற்காக சேலத்துக்கு வந்திருந்தனர்.

கூட்டம் அலைமோதியது

புதிய பஸ் நிலையம், அழகாபுரம், 5 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பலர் குடும்பத்துடன் ஜவுளிகடைகளுக்கு வந்து தங்களுக்கு விருப்பமான துணிகளை தேர்வு செய்து மகிழ்ந்தனர். மேலும் சிறு, சிறு ஜவுளிக்கடைகளில் வியாபாரம் படுஜோராக நடந்தது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநகரில் பல இடங்களில் சாலையோர தற்காலிக கடைகளும் அதிகளவு காணப்பட்டன. இங்கு சேலை, சுடிதார், குழந்தைகளுக்கு தேவையான துணிகள், பேண்ட், சட்டை, ஜீன்ஸ் போன்ற ஜவுளிகளின் வியாபாரம் சுறுசுறுப்பாக நடந்தது. பொதுமக்களின் கூட்டம் அலைமோதியதால் கடைவீதி பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. முதல் அக்ரஹாரம், கடைவீதி பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல போலீசார் அனுமதித்தனர்.

பட்டாசுகள் விற்பனை

தீபாவளிக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இருப்பதால் பட்டாசுகள் விற்பனை வேகமெடுத்துள்ளது. கடைவீதி, செவ்வாய்பேட்டை, அழகாபுரம், புதிய பஸ் நிலையம், 5 ரோடு, அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமானவர்கள் உரிமம் பெற்று பட்டாசு கடைகள் நடத்தி வருகின்றனர். பலர் தங்களது குழந்தைகளுடன் கடைகளுக்கு அவர்களுக்கு விருப்பமான புது ரக பட்டாசுகளை வாங்கினர்.

இதனால் பட்டாசு விற்பனை கடைகளிலும் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. சேலம் மாநகரில் உள்ள இனிப்பு கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தன. இதனால் இனிப்பு கடைகளில் விற்பனை களை கட்டியது. மக்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகளை தங்களது வீடுகளுக்கு வாங்கி சென்றனர்.

பாதுகாப்பு

தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்துள்ளதால் அசம்பாவித சம்பவங்களை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சாதாரண உடைகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சேலம் மாநகரில் 8 இடங்களில் கோபுரங்கள் அமைத்து கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்