< Back
மாநில செய்திகள்
ஆடி தள்ளுபடி விற்பனை பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
சென்னை
மாநில செய்திகள்

ஆடி தள்ளுபடி விற்பனை பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

தினத்தந்தி
|
17 July 2023 10:05 AM IST

ஜவுளி, தங்க நகைகள், பாத்திரம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஆடி தள்ளுபடி விற்பனையை அறிவித்ததை தொடர்ந்து, பொருட்களை வாங்க பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக திரண்டனர்.

வியாபார யுக்தி

ஆடி மாதம் என்றாலே மக்கள் அனைவருக்கும் மனதில் தோன்றுவது தள்ளுபடி விற்பனையே. பொதுவாக ஆடிமாதங்களில் திருமணம் போன்ற எந்த ஒரு மங்கல நிகழ்ச்சிகளும் நடைபெறாது. இதன் காரணமாக ஜவுளி, தங்க நகைகள், பாத்திரம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களின் விற்பனை மந்தமாகி தேக்கநிலை ஏற்படும். தேங்கிய பொருட்களை விற்பனை செய்யவும், தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு விற்பனை செய்ய தேவையான புதிய ரகங்களின் முதலுக்கான நிதியை திரட்டுவதற்காகவும் வியாபார நிறுவனங்கள் தொடங்கியதே இந்த தள்ளுபடி விற்பனை.

பொதுமக்களும் இந்த தள்ளுபடி விற்பனையை பயன்படுத்தி தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் வாங்கி வருகின்றனர். சிறிய வியாபார நிறுவனங்கள் முதல் பெரிய வியாபார நிறுவனங்கள் வரை இந்த தள்ளுபடி வியாபார யுக்தியை கடைபிடித்து வருகின்றனர்.

6 முதல் 60 சதவீதம் வரை

இந்த வருடம் ஆடி தள்ளுபடி விற்பனை கடந்த 15-ந் தேதி முதலே தொடங்கி நடந்து வருகிறது. முன்னணி ஜவுளி விற்பனை செய்யும் நிறுவனங்கள் 6 முதல் 60 சதவீதம் வரையும், செல்போன், டி.வி. மிக்சி, கிரைண்டர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் தள்ளுபடியுடன், கேஷ்பேக் சலுகையும் வழங்குகிறது.

சென்னையின் வர்த்தக பகுதியான தியாகராயநகர் ரங்கநாதன் தெரு, வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோடு, புரசைவாக்கம் பகுதிகளில் விடுமுறை தினமான நேற்று குடும்பம் குடும்பமாக திரண்ட மக்கள் தங்களுக்கு தேவையான ஆடை, அணிகலன்கள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள ஓட்டல்கள், வணிக வளாகங்கள், துணிக்கடைகள் திக்குமுக்காடின.

மேலும் செய்திகள்