செங்கல்பட்டு
கோடை விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த மக்கள்; கடும் போக்குவரத்து நெரிசல்
|தமிழ்நாட்டில் கோடை விடுமுறையையொட்டி மாமல்லபுர சுற்றுலாத்தளங்களில் நேற்று மக்கள் குவிந்தனர். இதனால் அந்தப்பகுதியில் வாகனங்கள் நீண்டநேரம் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுற்றுலா வாகனங்கள்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு நேற்று மேதினம் மற்றும் பொதுத் தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதை முன்னிட்டும், இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் திரண்டதால் கிழக்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி, கடற்கரைச்சாலை, கோவளம் சாலை வரை நின்ற சுற்றுலா வாகனங்களால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
மாமல்லபுரம் கடற்கரைக்குச் செல்லும் இரண்டு பாதையிலும் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் அந்த வாகனங்கள் கடற்கரைக்குச்சென்று திரும்ப பலமணி நேரம் ஆனது. அதனால் அங்கு அச்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பிறகு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆமை வேகத்தில் மெதுவாக ஊர்ந்து சென்றதைக் காண முடிந்தது. குறிப்பாக மாமல்லபுரம் பஸ் நிலையத்தில் இருந்து கோவளம் சாலை வரை நீண்ட தூரத்திற்கு கார், வேன், பஸ், ஆட்டோ போன்ற சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இரு சக்கர வாகன ஓட்டிகள் இச்சாலையில் பயணிக்க கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
மக்கள் குவிந்தனர்
சுற்றுலா வந்த பயணிகளால் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் அனைத்தும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது. சாலையோர கடைகளிலும் வியாபாரம் களைகட்டியது. பார்க்கின்ற இடங்களில் எல்லாம் சுற்றுலாப்பயணிகளின் கூட்டமே காணப்பட்டன. குறிப்பாக பள்ளிகள் மூடப்பட்டதால் தங்கள் பெற்றோர்களுடன் கோடை விடுமுறையை கழிக்க வந்த சிறுவர், சிறுமிகளும் பள்ளி விடுமுறை விடப்பட்ட உற்சாகத்தில் தங்களுக்குப் பிடித்த திண்பண்டங்களை வாங்கி சாப்பிட்டனர். பெரும்பாலான பயணிகள் கட்டுச்சோற்றை கட்டிக்கொண்டு வந்து புராதன சின்னங்களில் உள்ள புல்வெளிகளில் குடும்பம், குடும்பமாக அமர்ந்து சாப்பிட்டனர். குறிப்பாக நேற்று காலை நேரத்தில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால், ரம்மிய சூழலில் சுற்றுலாப்பயணிகள் புராதன சின்னங்களை கண்டுகளித்தனர். கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட இடங்களில் மக்கள் குவிந்தனர்.