காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட மக்கள்
|காணும் பொங்கலை மக்கள் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை,
பொங்கல் பண்டிகை கடந்த திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. அதற்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை, விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
இன்று காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காணும் பொங்கலையொட்டி மக்கள் சுற்றுலா தலங்களுக்கும், பொழுதுபோக்கு மையங்களுக்கும் சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பது வழக்கம். அதன்படி இன்று கடற்கரை, பூங்கா போன்ற இடங்களுக்கு சென்று மக்கள் காணும் பொங்கலை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடி வருகின்றனர்.
சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைகள், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா, பொருட்காட்சி ஆகிய இடங்களுக்கு மாலையில் குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து குவிய தொடங்கியுள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து கார், வேன், பஸ், மாட்டுவண்டி, மோட்டார் சைக்கிள்களில் படையெடுத்து வந்தனர். இதனால் அந்த இடங்களில் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.
மெரினா கடற்கரைக்கு அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மெரினா கடற்கரையில் மட்டும் 17 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமில்லாது உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, பொதுமக்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால், மெரினா கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் காணாமல் போவதை தவிர்ப்பதற்காக குழந்தைகளின் கைகளில் 'டேக்' ஒட்டப்பட்டுள்ளன. அதோடு சாலைகளில் பைக் சாகசங்களில் ஈடுபடுவோரை கண்காணிப்பதற்காக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.