கடலூர்
கடலூர் துறைமுகத்தில்மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்
|தீபாவளி பண்டிகையைமுன்னிட்டு கடலூர் துறைமுகத்தில் மீன்வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
கடலூர் முதுநகர்,
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் புத்தாடைகள், இனிப்பு, பட்டாசு உள்ளிட்டவற்றை வாங்கி செல்கின்றனர். இதனால் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதன்படி கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை யொட்டி முன்கூட்டியே மீன்வாங்குவதற்காக நேற்று கடலூர் துறைமுகத்தில் பொது மக்கள் குவிந்தனர். அவர்கள் அங்கு மீன்களை போட்டி போட்டு வாங்கினர். இதனால் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் மீன்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
ரூ.300 விலை உயர்வு
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், தீபாவளி பண்டிகை அன்று நாங்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லமாட்டோம். இதனால் தீபாவளி அன்று மீன்வரத்து இருக்காது என்பதால் பொதுமக்கள் முன்கூட்டியே கடலூர் துறைமுகத்துக்கு வந்து ஆர்வத்துடன் மீன்களை வாங்கி சென்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்பட்டதால் மீன்களின் விலை உயர்ந்தது. அதாவது வழக்கத்தை விட சங்கரா, பாறை, வஞ்சரம் உள்ளிட்ட மீன்வகைகள் ஒரு கிலோ ரூ.200-ல் இருந்து ரூ.300 வரை அதிகரித்து விற்பனையானது என்றார்.